search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில்  வத்தல்மலை செல்லும் பஸ்ஸை சேலம் பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்த வேண்டும்   -போக்குவரத்து துறைக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்
    X

    தருமபுரி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பென்னாகரத்திலிருந்து வத்தல்மலைக்கு இயக்கப்படும் பேருந்து.

    தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் வத்தல்மலை செல்லும் பஸ்ஸை சேலம் பஸ் நிறுத்தம் அருகில் நிறுத்த வேண்டும் -போக்குவரத்து துறைக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

    • தருமபுரியில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
    • பயணிகள் நிற்பதற்கு இடமின்றியும், மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமலும் தவித்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் வத்தல்மலையை சுற்றி பொட்டலாங்காடு, சின்னாங்காடு, பால்சிலம்பு, பெரியூர் உள்ளிட்ட 8 கிராமங்கள் உள்ளது.

    இக்கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 1418 மீட்டர் உயரம் உள்ள இந்த பகுதி தருமபுரியில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    மலை அடிவாரத்தில் இருந்து வத்தல்மலையில் உள்ள கிராமங்களுக்கு 14 கிலோ மீட்டர் மலை பாதையில் 24 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் செல்ல வேண்டும். இவ்வளவு சிறப்பு பெற்ற இந்த மலை கிராமத்திற்கு பேருந்து வசதி வேண்டி சுமார் 75 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வந்தனர்.

    இதனையறிந்த தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே வத்தல்மலைக்கு வருகைபுரிந்து அங்குள்ள மலை கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களுக்கு சாலை வசதி இல்லாததை அறிந்து அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம் படுத்துவதற்காக அனைத்து மலை கிராமத்திற்கும் சாலை வசதிகளை மேம்படுத்தி போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என அறிவித்தார்.

    அதனயடுத்து அங்கு 1 கோடியே 88 லட்சம் மதிப்பில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டது. அதனை தொடர்நது இதுவரை பேருந்து வசதி பெறாத அந்த மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த புதிய வழித்தடத்தில் தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து வத்தல்மலைக்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சக்கரபாணி , சிவசங்கர் ஆகிய 3 பேரும் ஒன்றிணைந்து பேருந்தை தொடங்கி வைத்ததோடு அதே பேருந்தில் மக்களோடு மக்களாக சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தனர்.

    வத்தல்மலை கிராமத்து மக்கள் பயன் பெறும் வகையில் காலை பென்னாகரத்தில் இருந்து புறப்பட்டு தர்மபுரி பஸ் நிலையம வரும் பேருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு 7.30 முதல் எட்டு மணிக்குள் வத்தல் மலையை சென்று அடைகிறது. அங்கு இருந்து வத்தல் மலையில் உள்ள உயர்கல்வி கற்கும் கல்லூரி மாணவர்கள், அன்றாட பணிக்கு வரும் பொதுமக்கள், அனைவரையும் ஏற்றிக்கொண்டு தருமபுரி பஸ் நிலையம் வந்து மீண்டும் தருமபுரி பஸ் நிலையத்தில் இருந்து மதியம் 12 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு வத்தல்மலை சென்று இரவு 8 மணிக்கு தருமபுரி பஸ் நிலையத்தை வந்து அடைகிறது.

    வத்தல்மலை பொதுமக்களின் நீண்ட கால கனவை பூர்த்தி செய்த இந்த பேருந்து தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் பாலக்கோடு பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதால் அங்கு வத்தல்மலை செல்லும் பயணிகள் நிற்பதற்கு இடமின்றியும், மழைக்காலங்களில் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமலும் தவித்து வருகின்றனர். நிழற்குடைகள் அனைத்தும் நடைபாதை வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சேலம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்கும், மழை வெயில் காலங்களில் பாதுகாப்பாக பயணிகள் இருப்பதற்கும் இடவசதி இருப்பதால் வத்தல் மலை பேருந்தை சேலம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வத்தல்மலை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×