search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பிடமனேரி ஏரியில் சாக்கடை நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம்
    X

    குப்பை மற்றும் கழிவுநீர் கலந்து சாக்கடையாக காட்சியளிக்கும் பிடமனேரி ஏரி.

    பிடமனேரி ஏரியில் சாக்கடை நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம்

    • 10 வார்டு பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை இந்த ஏரியில் விடுவதால் கழிவு நீர் கலந்து சாக்கடை நிறைந்த ஏரியாக மாறி உள்ளது.
    • மாவட்ட நிர்வாகமும், வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தமிழகத்தில் மிகப்பெரிய ஊராட்சி இலக்கியம்பட்டி முதன்மை ஊராட்சியாக இருந்து வருகிறது. இந்த ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.

    பிடமனேரி, வி.ஜெட்டிஅள்ளி, மாந்தோப்பு, நெல்லிநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த ஊராட்சியில் முக்கிய நீர் ஆதாரமாக இலக்கியம்பட்டி ஏரி, பிடமனேரி ஏரி ஆகிய இரண்டு ஏரிகள் இருந்து வருகிறது. இதில் பிடமனேரி ஏரி 40 ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்தது.

    ஏரியின் நடுவே 2 திறந்தவெளி கிணறுகள் அமைத்து ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது.

    ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தன போக்கால் 10 வார்டுகளுக்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீரை இந்த ஏரியில் விடுவதால் ஏரி கழிவு நீர் கலந்து சாக்கடை நிறைந்த ஏரியாக மாறி உள்ளது.

    ஆண்டு தோறும் அரசுக்கு மீன் பாசி விற்பனையில் 15 லட்சத்திற்கு மேல் வருவாயை ஈட்டி தரும் இந்த ஏரி தற்பொழுது ஆகாயத்தாமரை நிறைந்து பார்க்கும் இடம் எல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளும், பன்றிகளும் மேய்ந்து ஏரி மாசுபட்டு துர்நாற்றம் வீசி வருவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஏரியை சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு நோய்த் தொற்றுகளுக்கு ஆளாகி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் இப்பகுதி பொது மக்கள் பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்திருந்த சட்டமன்ற கணக்கு குழுவிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மனுவாக கொடுத்தோம். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற கணக்கு குழுவும் மாவட்ட ஆட்சியரும் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இலக்கியம்பட்டி ஊராட்சி மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 10 ஏக்கர் ஏரி நிலத்தை மீட்க வேண்டும். ஏரிக்கு பாதுகாப்பு வேலி அமைத்து தண்ணீரை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிக்கோடி பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அதனையும் சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் ஏரியை தூர்வாரி, ஆகாய தாமரையை அகற்றினால் தருமபுரி நகர மக்களுக்கு பொழுது போக்குவதற்கு படகு சவாரி செய்யவும், பறவைகள் தங்குவதற்கும் ஏதுவாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×