என் மலர்
உள்ளூர் செய்திகள்
விமான துறையில் வேலைவாய்ப்புகள்.. சென்னையில் பிரமாண்ட பயிற்சி மையம் துவக்கம்
- இந்தியாவின் 22 விமான நிலையங்களை நிர்வகிக்கும் மிகப்பெரிய நிறுவனம்.
- 158-க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களை வெற்றிகரமாகக் கையாண்டது.
விமான போக்குவரத்து சேவை பணிகளில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், விமான சேவையில் பிரபலமான குளோபல் ஃப்ளைட் ஹேண்ட்லிங் சர்வீசஸ் நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளது.
பஹ்ரைன் நாட்டின் கல்ஃப் ஏவியேஷன் அகாடமியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்திற்கு குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் என பெயரிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே, 8000 சதுர அடியில் குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கல்வியில், விரிவான பயிற்சித் திட்டங்களை வழங்க, அதிநவீன வகுப்பறைகள், அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி வசதிகள் மற்றும் அதிநவீன கற்றல் அனுபவத்தை வழங்க அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு இந்த பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின், குளோபல் ஸ்கூல் ஆஃப் ஏவியேஷன்- விமானப் பள்ளி, கேபின் க்ரூப் பயிற்சி, பல்வேறு விமான நிலைய நிர்வாகத் திட்டங்களில் உள்ள படிப்புகள் உட்பட விமானப் பயணத்தின் பல்வேறு அம்சங்களை கற்றுத்தருகிறது.
இதில் ஸ்மார்ட் கிளாஸ் அறை, ஆய்வகம், கேபின் க்ரூ பயிற்சிக்கான மாக் செட், நூலகம் மற்றும் க்ரூமிங் அறை வசதிகள் உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன.
புதிய பயிற்சி மையம் குறித்து பேசிய அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, "கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு விமானத்துறையில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் தேவை. இந்த பயிற்சி மையம் சென்னை விமான நிலையத்திற்கு அருகில், அமைந்துள்ளதால் இளைஞர்கள் இதனை பயன்படுத்தி திறமையை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்," என்றார்.