என் மலர்
உள்ளூர் செய்திகள்
8 நாட்களுக்கு பிறகு அனுமதி- கும்பக்கரை அருவியில் ஐயப்ப பக்தர்கள் உற்சாக குளியல்
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 913 கன அடி நீர் வருகிறது.
- வைகை அணையின் நீர்மட்டம் 64.40 அடியாக உள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இதன் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல், பாம்பார்புரம், வெள்ளகவி உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 13-ந்தேதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தே காணப்பட்டதால் கடந்த 8 நாட்களாக தடை தொடர்ந்தது. இந்த நிலையில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கும்பக்கரை, சுருளி அருவியில் நீராடிச் செல்வார்கள். அவர்களும் அதிக அளவில் வந்ததால் கும்பக்கரை அருவியில் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குளித்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.70 அடியாக உள்ளது. 913 கன அடி நீர் வருகிறது. 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 4633 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 64.40 அடியாக உள்ளது. 1808 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வரத்து 43 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 126.28 அடியில் நீடிக்கிறது. வரத்தும் திறப்பும் 31.29 கன அடியாக உள்ளது. சண்முகாநதி அணை நீர்மட்டம் 52.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையில் மட்டும் 3.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.