என் மலர்
உள்ளூர் செய்திகள்
குற்றாலம் மெயின் அருவியில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்
- பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் கொட்டியது. இதனால் அருவிக்கரைகள் மிகப்பெரிய அளவில் சேதங்களை சந்தித்தது.
இந்த சேதங்களானது சீர் செய்யப்பட்டு தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பழைய குற்றாலம் அருவியில் இதுவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தால் பழைய குற்றாலம் அருவியில் மட்டும் 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சீரமைப்பு பணி ஓரளவு நிறைவு பெற்றதால், நேற்று இரவு தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் காலை முதலே குற்றாலம் மெயின் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி சபரிமலை நோக்கி சென்று வருகின்றனர்.
மேலும் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களை குளிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த குற்றாலம் பகுதி வியாபாரிகள் தற்பொழுது அருவியில் குளிக்க அனுமதி வழங்கியதை அடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.