search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த தகவலால் பரபரப்பு- திருப்பூரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
    X

    கோவில்களை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த தகவலால் பரபரப்பு- திருப்பூரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

    • சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.
    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

    திருப்பூர்:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு போன் வந்தது.

    அதில் பேசிய நபர், திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இருந்து பேசுவதாகவும், தனக்கு அருகே இருந்து மது அருந்திய 2பேர் , திருப்பூர் படியூரில் உள்ள முருகன் கோவில், கோவை மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பேசி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனையிட்டனர்.

    அப்போது போனில் தகவல்தெரிவித்த நபர் அங்கு இல்லை. மேலும் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.இதில் போனில் பேசிய நபர் திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 47)என்பது தெரியவந்தது. இன்று காலை அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும் உண்மையிலேயே 2பேர் கோவிலில் குண்டு வைத்து தகர்க்க போவதாக பேசியதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தாரா?, அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக இப்படி செயல்பட்டாரா? என்று போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு அதில் மர்மநபர்கள் யாராவது வந்து சென்றுள்ளனரா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில்களில் குண்டு வைக்கப்போவதாக வந்த தகவலால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×