என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறநிலையத்துறை அதிகாரி-பூசாரியை மாற்ற கோரி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
- கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரகாரம் முனியப்பன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்தப் பகுதியில் முனியப்பன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இது விளங்குகிறது.
இந்நிலையில் இந்த கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது .
அதனை இக்கோவிலில் பணிபுரியும் செயல் அலுவலர் மற்றும் பூசாரி ஆகியோர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.
அப்போது அவர்கள், கோவில் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும். அதற்கான செலவினங்களை ஊர் பொது மக்களே தருகிறோம் என கோரிக்கை விடுத்தும், அதை செயல்படுத்தவில்லை.
மேலும், பூசாரி உண்டியலில் பணம் போடுவதை தடுத்து, காணிக்கையாக பணங்களைப் பெற்று வருகிறார் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். உண்டியல் பணத்தை எண்ணும் பொழுது வழக்கமான நடைமுறைகளை கடைபிடிக்காமல், முறைகேடாகவும், முறையாக கணக்கு காட்டுவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
செயல் அலுவலர் மற்றும் பூசாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த பகுதியில் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






