search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 2 பேர் பலி
    X

    பலியான கேசவன் மற்றும் அடைக்கலராஜா.

    ஒட்டன்சத்திரம் அருகே பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதி 2 பேர் பலி

    • பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    மதுரை மீனாட்சிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த அழகர் மகன் கேசவன் (17), வடிவேலன் தெருவைச் சேர்ந்த அடைக்கலராஜா (27) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சாலைப்புதூர் அருகே அவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழைய கன்னிவாடி கரிசல்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (21) என்பவர் தனது அத்தை மகளான துர்கா என்பவருக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை காரில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டு இருந்தார்.

    திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அடைக்கலராஜா மற்றும் கேசவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் வரவே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான கேசவனின் தந்தை அழகரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×