search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பள்ளிக்கரணையில் ஏரிக்குள் பாய்ந்த கார்: ஒருவர் பலி
    X

    பள்ளிக்கரணையில் ஏரிக்குள் பாய்ந்த கார்: ஒருவர் பலி

    • கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த நாராயணபுரம் ஏரிக்குள் பாய்ந்தது.
    • ஜே.சி.பி. வாகனத்தை நிறுத்தி ஏரிக்குள் பாய்ந்த காரை மீட்டனர்.

    வேளச்சேரி:

    சிறுசேரியில் பிரபல தனியார் ஐ.டி.நிறுவனம் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த கவுசல் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இரவு நேரத்தில் பணிமுடிந்து செல்லும் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் உள்ள கார்களில் வீட்டுக்கு பயணம் செய்யும் போது காவலாளி கவுசல் உடன் செல்வது வழக்கம்.

    நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் ஊழியர்கள் சிலர் பணி முடிந்து ஒப்பந்த அடிப்படையில் உள்ள காரில் பல்லாவரம் நோக்கி பயணம் செய்தனர். அவர்களுடன் காவலாளி கவுசலும் சென்றார். காரை டிரைவர் ராஜசேகர் ஓட்டினார். ஊழியர்களை இறக்கிவிட்டதும் கார் மீண்டும் சிறுசேரி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தது.

    பள்ளிக்கரணை அருகே பல்லாவரம்-துரைப்பா க்கம் 200 அடி ரேடியல் சாலையில் கார் சென்று ெகாண்டு இருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தகார் சாலையோரம் இருந்த நாராயணபுரம் ஏரிக்குள் பாய்ந்தது.

    இதில் காருக்குள் இருந்து வெளியே வரமுடியாமல் டிரைவர் ராஜசேகரும், காவலாளி கவுசலும் சிக்கிக்கொண்டனர். காருக்குள் தண்ணீர் புகுந்ததால் காவலாளி கவுசல் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ரோந்து போலீசார் உடனடியாக வந்தனர். அவர்கள் அவ்வழியே சென்ற ஜே.சி.பி. வாகனத்தை நிறுத்தி ஏரிக்குள் பாய்ந்த காரை மீட்டனர்.

    அப்போது காருக்குள் காவலாளி கவுசல் பிணமாக கிடந்தார். டிரைவர் ராஜசேகர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அவரை உடனடியாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிரைவர் ராஜசேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சாலையோரம் ஏரிக்கரையில் எந்த தடுப்புகளும் இல்லை. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ஏரிக்குள் பாய்ந்துள்ளது.

    மேலும் காரில் பயணம் செய்த ஐ.டி.நிறுவன ஊழியர்களை இறக்கிவிட்டு திரும்பி வந்த போது விபத்து ஏற்பட்டதால் அதில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டதால் டிரைவரும் உயிர் தப்பி உள்ளார்.

    இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.

    Next Story
    ×