என் மலர்
உள்ளூர் செய்திகள்
`மெத்தபெட்டமைன்' போதையில் மிதக்கும் சென்னை இளைஞர்கள்
- பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- பயன்படுத்தும் அளவை பொறுத்து மணிக்கணக்கில் போதையில் மிதக்க முடியும்.
இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் போதைப் பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சிகரெட், மது ஆகிய போதை பழக்கங்களையெல்லாம் தாண்டி கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் சமீபகாலமாக புதிதாக மெத்தபெட்டலைன் போதைப் பொருளின் பழக்கம் இளம் தலைமுறையினரை அதிகம் தொற்றிக் கொண்டுள்ளது.
பவுடர் வடிவிலான இந்த போதைப் பொருள் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டு கல்லூரி மாணவர்கள், படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரிடையே விற்பனை செய்வது அதிகரித்துள்ள நிலையில் சென்யைில் வாலிபர்கள் சிலர் அதனை தாங்களாகவே தயாரித்திருப்பதும் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து மட்டுமின்றி பெங்களூரில் இருந்தும் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் அதிக அளவில் கடத்தி வரப்படுவதும் தெரிய வந்துள்ளது.
உப்பு போன்ற தோற்றத்தில் இருக்கும் மெத்த பெட்டமனை வாலிபர்களும், இளம்பெண்களும் நுகர்ந்து போதை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அதனை சூடுபடுத்தி புகையாக மாற்றி போதை ஏற்படுத்திக் கொள்பவர்களும் உண்டு.
பயன்படுத்தும் அளவை பொறுத்து மணிக்கணக்கில் போதையில் மிதக்க முடியும் என்பதால் இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் அதன் பயன்பாடு பரவலாகவே இருந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சில ரசாயனங்களை கொண்டு எளிதாக தயாரித்து விடக்கூடிய போதைப் பொருளாக இருப்பதால் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா போன்று பயிரிட்டு வளர்க்க வேண்டியது இல்லை. நினைத்த நேரத்தில் தயாரித்து விடலாம் என்பதே இதன் புழக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மீனா என்ற நடிகை போதைப் பொருள் விற்ற வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவரை போன்று கடந்த 3 மாதங்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெத்தபெட்டமைன் போதைப் பொருள் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவலையும் போலீசார் வெளியட்டுள்ளனர்.
பாலியல் அழகிகளை அழைத்துச் சென்று அங்கு உல்லாசமாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் மெத்தபெட்டமின் போதைப் பொருளை பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. இதனை பயன்படுத்தி இருப்பவர்களை எளிதாக கண்டு பிடிக்க முடியாது.
கண்களை கூர்ந்து நோக்கினால் ஓரளவுக்கு கண்டு பிடிக்க முடியும். மற்றபடி அதனை பயன்படுத்தி இருப்பவர்கள் போதையில் மிதந்தாலும் வெளியில் தெரியாது.
ஆனால் அவர்கள் உள்ளுக்குள் முழு போதையை உணர்ந்து கொண்டிருப்பார்கள். இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த போதிலும் பல இளைஞர்கள் அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் போதையின் பாதையில் பயணிப்பதாக தெரிவித்துள்ள போலீசார் இதனை கட்டுப்படுத்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் போதைப் பொருட்களின் பயன்பாடு குறித்து எடுத்துக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
மெத்தபெட்டமின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 2 போலீசாரும் சென்னையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பின்னணி பற்றி விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் செக்ஸ் உணர்வை தூண்டும் வகையிலும் மெத்தபெட்டமின் போதைப் பொருள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இதன் காரணமாகவே இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை மெத்தபெட்டமின் போதைப் பொருள் கட்டிப்போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் இருந்து அவர்களை விடுவிக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை மாநகர போலீசாரும் அது போன்று அதிரடி காட்டி வந்த போதிலும் மெத்தபெட்டமினை கட்டுப்படுத்துவது போலீசுக்கு பெரிய சவாலாகவே மாறிப்போய் உள்ளது.