என் மலர்
உள்ளூர் செய்திகள்
2024-ம் ஆண்டு சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி- ஜனவரி 16, 17, 18-ந் தேதிகளில் நடக்கிறது
- 2023-ம் ஆண்டை காட்டிலும் அதிகமான அரங்குகளுடன் கண்காட்சியை அமைக்க உள்ளோம்.
- 2024-ம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சியில் மதிப்புறு விருந்தினராக மலேசியா நாட்டை அழைக்க உள்ளோம்.
சென்னை:
2023-ம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அதனைத்தொடர்ந்து 2024-ம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சி நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு, மொழிபெயர்ப்பு மானியம் அறிவிப்பு, மதிப்புறு விருந்தினராக எந்த நாடு அழைக்கப்பட உள்ளது? என்பதை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பொது நூலக இயக்குனர் இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இயக்குனர் திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
எழுத்தாளர்களின் படைப்புகள், இலக்கியங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையில்தான் இந்த புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. உலகத்தில் இருக்கின்ற எந்த மொழியாக இருந்தாலும், அது நல்ல எழுத்தாளர்கள், படைப்புகளை நாம் கொண்டாடும் விதமாகவும், நம்முடைய தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாகவும், வழங்க வேண்டும் என்ற ஆசையிலும்தான் இதை நடத்துகிறோம்.
நம்முடைய தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், இலக்கியங்களை மற்ற நாட்டின் மொழிகளுக்கு அதை மொழி பெயர்க்க வேண்டும் என்று சொல்லும்போது, அதற்கான மொழிபெயர்ப்பு நிதியை முதலமைச்சர் வழங்கலாம் என்று சொன்னார். அதன்படி, இந்த மானியம் வழங்கப்படுகிறது.
2023-ம் ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சியை குறுகிய காலகட்டத்தில்தான் நடத்தினோம். 24 நாடுகளில் இருந்து 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அதில் கையெழுத்தானது. அதனை நடைமுறைப்படுத்த மொழிபெயர்ப்பு மானியம் வழங்கப்பட வேண்டும்.
ஏறத்தாழ ரூ.3 கோடி தமிழ்நாடு அரசு வழங்க இருக்கிறது. கலைஞரின் நூற்றாண்டில் மொழிபெயர்ப்புக்கான மானியத்தை வழங்குவதை பெருமையாக கருதுகிறோம்.
2024-ம் ஆண்டு சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி வருகிற ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18 ஆகிய 3 நாட்கள் நடத்தப்பட உள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த கண்காட்சியை வரும் ஆண்டில் நடத்துகிறோம்.
2023-ம் ஆண்டை காட்டிலும் அதிகமான அரங்குகளுடன் கண்காட்சியை அமைக்க உள்ளோம். 2024-ம் ஆண்டுக்கான புத்தக கண்காட்சியில் மதிப்புறு விருந்தினராக மலேசியா நாட்டை அழைக்க உள்ளோம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சென்னையில் மட்டுமே நடைபெற்ற புத்தக கண்காட்சியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார் முதலமைச்சர். கடந்த ஓராண்டுக்கு மேலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கண்காட்சி நடத்தி இருக்கிறோம். அதோடு சேர்ந்து இலக்கிய விழாக்களையும் நடத்தியுள்ளோம். வரும் ஆண்டிலும் தொடர்ந்து நடைபெறும்.
தமிழ்நாட்டின் எழுத்தாளர்களையும், பதிப்பாளர்களையும், படைப்பாளர்களையும் கொண்டாடும் அரசையும், முதலமைச்சரையும் நாம் பெற்றுள்ளோம். முதலமைச்சருக்கு நம் தமிழ்நாட்டு மக்கள், எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், பதிப்பாளர்கள் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். அனைவரும் சேர்ந்து 2024-ம் ஆண்டு சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி என்ற நல்ல நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி காட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மொழி பெயர்ப்புக்கு அறிவிக்கப்பட்ட ரூ.3 கோடிக்கான காசோலையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரிடம் (பபாசி) வழங்கினார்.