search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை-கொல்லம், பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று முதல் மின்சார ரெயிலாக இயக்கம்
    X

    சென்னை-கொல்லம், பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று முதல் மின்சார ரெயிலாக இயக்கம்

    • மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக முடிந்தது.
    • இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

    நெல்லை,ஜூலை.28-

    ரெயில்வே நிர்வாகம் சார்பில் பெரும்பாலான இடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இயக்கும்போது ரெயிலில் பழுது பார்ப்பு, எரிபொருள் செலவு என்பது நிலக்கரி மற்றும் டீசல் என்ஜின் ரெயில்களை விட குறைவாக இருந்ததன் காரணமாக தமிழகத்திலும் பல வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டது.

    அந்த வகையில் கடந்த 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதையில் நிலக்கரி என்ஜின் மூலம் இயங்கிவந்த செங்கோட்டை-புனலூர் ரெயில் பாதையை மின்மயமாக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு கேரள மாநிலம் எடமன் மற்றும் தமிழகத்தில் பகவதிபுரம் இடையே மின்மயமாக்கும் பணி தொடங்கியது. மலை குகை பகுதிகளிலும், பாலங்களிலும் சுமார் 34 கிலோமீட்டர் தூரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, புனலூரிலும், செங்கோட்டையிலும் 110 கிலோ வோல்ட் ரெயில்வே துணை மின் நிலையங்கள் தலா ரூ.28 கோடியில் அமைக்கப்பட்டன. தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டது.

    அவை வெற்றிகரமாக முடிந்ததால், இன்று முதல் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் மின்சார ரெயில்களாக இயக்கப்படும் என தென்னக ரெயில்வே சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதன்படி வண்டி எண் 16101/16102 சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் முழுமையாக மின்சார என்ஜின் மூலமாக இயக்கப்படுகிறது. வண்டி எண்.16791/16792 நெல்லை-பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16327/16328 மதுரை-குருவாயூர் இடையேயான எக்ஸ்பிரஸ் மற்றும் நெல்லை-செங்கோட்டை இடையேயான பயணிகள் ரெயில் உள்ளிட்டவை இன்று முதல் முழுமையாக மின்வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

    இந்த மின்வழித்தடத்தில் 25 ஆயிரம் கிலோவோல்ட் மின்சாரம் வரும் என்பதால் பொதுமக்கள் அந்த இடத்தை பாதுகாப்பாக கடக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் அழுத்தம் காரணமாக 2 மீட்டர் தூரத்திற்கு மின்சார வேகம் இருக்கும் என்பதால் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக உயரம் கொண்ட பொருட்களுடன் வாகனங்களை ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்காக கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×