என் மலர்
உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதி கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்: போக்குவரத்து பாதிப்பு
- 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர்.
- 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஈச்சம்பள்ளம், புதுப்பட்டி, எட்டிக்குழி, நெற்குந்தி, கருப்பயனூர், ஜீவா நகர் ஆகிய கிராமங்களில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் சுமார் 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் சாலை சரியில்லாததால் பிரசவ காலங்களில் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் அழைத்தால் சாலை சரியில்லை என்றுகூறி இந்த வழித்தடத்தில் ஆம்புலன்ஸ் வருவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் பஸ்களும் சாலை சரியில்லாததால் போதிய பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே சாலையை சீரமைத்து தர வேண்டி பலமுறை அரசு அதிகாரிக ளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியும், கடந்த 15 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ஈச்சம்பள்ளம் கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்படாத கிராம மக்கள் பின்பு பென்னாகரம் டி.எஸ்.பி. மகாலட்சுமி மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவ லர், தாசில்தார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததின் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
4 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.