search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர் பாதுகாப்பு, காலநிலை திட்ட  செயலாக்கம் குறித்த குழு கூட்டம்
    X

    நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட அளவிலான வழிநடத்துதல் குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    நீர் பாதுகாப்பு, காலநிலை திட்ட செயலாக்கம் குறித்த குழு கூட்டம்

    • தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு-2.0 திட்ட செயலாக்கம் குறித்த மாவட்ட அளவிலான வழிநடத்துதல் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.

    நீர் பாதுகாப்பு மற்றும் காலநிலை தகவமைப்பு என்பது இந்திய - ஜெர்மன் இருதரப்பு திட்டம் ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் (GIZ) இந்திய அரசாங்கத்தின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MORD) மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (MOJS) ஆகியவற்றுடன் இணைந்து நியமிக்கப்பட்ட ஒரு இருதரப்பு திட்டமாகும்.

    இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. புவியியல் தகவல் அமைப்பு (GIS) மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கான நீர்வள மேலாண்மை மற்றும் செறிவூட்டல் திட்டத்தினை தயாரித்து, இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் முதல் கட்டம் 2019-2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது.

    இப்போது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் (வாஸ்கா-2) 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இது 17 மாநிலங்களை உள்ளடக்கிய 15 வேளாண் காலநிலை மண்டலங்களில் நிலையான இயற்கை வள மேலாண்மை மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

    அவற்றில் கிழக்கு கடற்கரை சமவெளி மற்றும் மலை மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும்.

    தமிழ்நாட்டில் வாஸ்கா 2.0 செயலாக்கத்திற்கு தருமபுரி மற்றும் விழுப்புரம் ஆகிய 2 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    வாஸ்கா 2.0 செயலாக்க திட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் மற்றும் இதர ஒருங்கிணைப்புப் பணிகளுக்கு வாஸ்கா திட்டச் சான்றுகள் அடிப்படையிலான அறிவியல் அணுகுமுறை (புவியியல் தகவல் அமைப்பு) முன்மொழியப்படும்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, வன அலுவலர் அப்பல நாயுடு, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, ஜெர்மன் மத்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சக தொழிற்நுட்ப ஆலோசகர் ராதா பிரியா, சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ரங்கலட்சுமி மற்றும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×