search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அகத்தியரின் மருத்துவ ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்- மாநாட்டில் வலியுறுத்தல்
    X

    அகத்தியரின் மருத்துவ ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்- மாநாட்டில் வலியுறுத்தல்

    • மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது.
    • நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையும், புதுடில்லி பாரதீய மொழிகள் குழுமமும் இணைந்து அகத்திய மாமுனிவர் ஜெயந்தி விழா மற்றும் தேசிய மாநாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை தாங்கி பேசுகையில், மாமுனிவர் பெயரில் விழா எடுப்பது காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு பெருமையாக உள்ளது. அகத்திய மாமுனிவர் மறைந்துவிடவில்லை இன்றும் அவர் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார். நமது அன்னை பூமியான பாரதநாடு உள்ளவரை அகத்திய மாமுனிவரும் வாழ்ந்து கொண்டிருப்பார் என பேசினார். நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கலா மாநாட்டைத் தொடங்கி வைத்துக் கருத்தரங்கு மலரை வெளியிட்டுப் பேசினார். கர்நாடக மாநிலம் மைசூரின் மூத்த வக்கீலும் அகத்திய மரபின் ஆய்வாளருமாகிய ஷாமா பட் மாநாட்டின் மைய உரை ஆற்றினார்.

    அவர் பேசுகையில், நமது இந்திய அறிவு மரபின் தோற்றம் அகத்தியரிடம் இருந்தே தொடங்குகின்றது. அவர் பாரத தேசம் முழுமைக்கும் உரியவராகத் திகழ்கின்றார். அகத்தியரின் படைப்புகள், பங்களிப்புகள், மருத்துவ மரபுகள் இந்திய மொழிகளின் தோற்றத்திற்கும் தொன்மைக்கும் சிறப்புகளுக்கும் அடிப்படைக் காரணமாக விளங்குகின்றன. வடமொழிக்கும் தமிழுக்குமான இணைப்புப் பாலமாக அகத்தியர் திகழ்ந்து வருகின்றார். இந்த இரு மொழிகளும் உலகின் பழமையான மற்றும் சிறப்பான மொழிக்குடும்பங்களாக, செம்மொழிகளாகத் திகழ்கின்றன.

    பாரத தேசத்திற்கு அகத்தியர் மாமுனிவர்தான் முதுகெழும்பாகத் திகழ்கின்றார். இந்திய மூலிகை மருத்துவ அறிவின் தோற்றமாகவும் அவரது மருத்துவ மூலிகைகளின் நூல்கள் விளங்குகின்றன.

    மருத்துவத்துறையில் அவரின் பங்களிப்புகள் மிகவும் ஆச்சரியமூட்டுகின்றன. அகத்தியர் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். அவரைப் பற்றிய முழுத்தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். துளு என்னுடைய தாய்மொழி. தமிழில் நீங்கள் கூறும் மருந்து என்னும் சொல் துளு மொழியிலும் மருந்து என்றே வழங்கப்படுகின்றது என்றார்.

    மாநாட்டில் பேராசிரியர் அரங்க. ராமலிங்கம், பழனி ஐவர்மலை அனாதி நிறுவனத்தின் நிறுவனர் ஆதி நாராயண சுவாமிகள், தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்தகுமார், பேராசிரியர்கள் முத்தையா, சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பாரம்பரிய மருத்துவர்கள் அகத்தியர் மருத்துவ குறிப்பு சம்பந்தமான கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மாநாட்டில் பல்கலைக்கழக வேளாண்மை துறை சார்பில் சித்த மருத்துவ மூலிகைகள், காணிக்காரப் பழங்குடிகளின் மருந்துப் பொருட்கள், மருத்துவத் தாவரங்கள் குறித்த கண்காட்சி இடம்பெற்றிருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், சித்த மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

    மாணவர்களுக்கு அகத்தியர் பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    Next Story
    ×