search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் கனமழை: ஸ்ரீவைகுண்டம் தற்காலிக பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு
    X

    தொடர் கனமழை: ஸ்ரீவைகுண்டம் தற்காலிக பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையில் அரிப்பு ஏற்படுகிறது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்குளம், செய்துங்கநல்லூர், புதுக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள சத்தக்காரன் பட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் ஊருக்குள் பொதுமக்கள் சென்று வர தற்காலிகமாக குழாய்கள் மூலம் பாதைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வந்த தொடர் மழையால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பாலத்திற்காக தோண்டப்பட்டு குழிகள் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காலை முதல் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.


    உடனடியாக இந்த பாலத்தை சரி செய்து போக்குவரத்து நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையில் கருங்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் தொடர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×