search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும்- கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பட்டமளிப்பு விழாக்களை உடனே நடத்த வேண்டும்- கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்

    • தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
    • பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளர் உட்பட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

    பொறியியல் கலந்தாய்வுக்கு 1,87,693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 7.5% இட ஒதுக்கீட்டில் 7,052 மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது.

    தொழிற்சாலைகளோடு தொடர்புகொண்டு பொறியியல் கல்லூரிகளில் கட்டமைப்பை மாற்றியுள்ளோம். நடப்பாண்டு பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பல்வேறு பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றும் பட்டம் பெறாமல் உள்ளனர்.

    பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்து நடத்த வேண்டும் என்று கவர்னர் நினைக்கிறார்.

    உடனடியாக பட்டமளிப்பு விழாவை அனைத்து பல்கலைக்கழங்களில் நடத்த கவர்னர் முன்வர வேண்டும். கவர்னர் முன்வந்தால் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கும்.

    பட்டமளிப்பு விழா குறித்து முடிவெடுக்க துணைவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பட்டமளிப்பு விழா நடத்தாததால் மாணவர்கள் பாதிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×