search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளுக்கு கொரோனா பரவலா?- சிறை அதிகாரிகள் மறுப்பு
    X

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகளுக்கு கொரோனா பரவலா?- சிறை அதிகாரிகள் மறுப்பு

    • மதுரை மத்திய சிறையில் கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக வரும் செய்தி முற்றிலும் தவறானது.
    • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மதுரை மத்திய சிறைக்கு அனுபவம் உள்ளது.

    மதுரை:

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் தலை தூக்கி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றான மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண் உள்பட 5 பேருக்கு கொரோனா பரவியதாகவும், அவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 'வைரஸ் காய்ச்சல்' என்ற பெயரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது.

    ஆனால் அதற்கு சிறைத்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மத்திய சிறையில் கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக வரும் செய்தி முற்றிலும் தவறானது. மதுரை மத்திய ஜெயிலில் சுமார் 1800 சிறைவாசிகள் உள்ளன. இவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு கிடையாது.

    சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு வரும் கைதிகளுக்கும் அரசு மருத்துவமனையில் முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதன் பிறகு அவர்கள் ஜெயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கொரோனா முடிவு வரும் வரை அவர்கள் சிறையில் தனியாக அடைக்கப்பட்டு வைக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு, அவர்கள் சிறைக்குள் மாற்றப்படுகின்றனர்.

    ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மதுரை மத்திய சிறைக்கு அனுபவம் உள்ளது. இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மத்திய சிறையில் கடந்த மாதம் 28-ந் தேதி விசாரணை கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்தது.

    அதன் அடிப்படையில் மதுரை போலீசாரிடம் வழிக்காவல் கோரப்பட்டு உள்ளது. சிறைவாசிகளின் நலன், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஜெயில் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்தனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×