search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடசென்னையில் கொலை, கற்பழிப்பு குற்றங்கள் அதிகம்- குற்ற சம்பவங்களை தடுக்க வரைபட திட்டம் மூலம் கண்காணிப்பு
    X

    வடசென்னையில் கொலை, கற்பழிப்பு குற்றங்கள் அதிகம்- குற்ற சம்பவங்களை தடுக்க வரைபட திட்டம் மூலம் கண்காணிப்பு

    • குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு ‘ஜி.ஐ.எஸ்’ எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

    சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக குற்றம் நடைபெறும் இடங்களை உடனே தெரிந்து கொண்டு அங்கு விரைந்து செல்லும் வகையிலும், குற்றங்கள் நடக்காதவாறு தடுக்கும் வகையிலும் குற்ற சம்பவ தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு 'ஜி.ஐ.எஸ்' எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு வரைபட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டத்துக்காக கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளில் சென்னையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல் ஆகிய குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் துல்லியமாக சேகரித்து தொகுக்கப்பட்டு உள்ளன.

    இவை எந்த வகை குற்றங்கள், எந்த இடத்தில், எந்த தினத்தில், எந்த நேரத்தில் நடைபெற்றது என்பது உள்பட அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு வரைபடமாக்கப்பட்டு உள்ளது.

    102 போலீஸ் நிலையங்களில் இருந்தும் 385 போலீசார் குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து தகவல்களை சேகரிக்க கிட்டத்தட்ட 6 மாதங்கள் செலவிட்டனர். இந்த வரை படம் ஒவ்வொரு நாளும் நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது.

    சென்னை நகரம் முழுவதும் உள்ள 67 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களின் அமைவிடம் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் விடுதிகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள், வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள், விபத்து பகுதிகள் போன்றவையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த வரைபடத்தில் ஒரு வழக்கு மட்டும் பதிவாகியுள்ள பகுதிகளை குறிக்க மஞ்சள் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகும் இடங்களில் ஆரஞ்சு புள்ளி உள்ளது. அதிக குற்றங்கள் நடைபெறும் பகுதி சிவப்பு நிறமாக உள்ளது.

    பாலியல் தொல்லை, கற்பழிப்பு, போக்சோ போன்ற குற்றங்களுக்கு வெவ்வேறு குறியீடுகள் ஒதுக்கப்படுகிறது.

    இந்த வரைப்படத்தின் படி கடந்த 7 ஆண்டுகளில் வடசென்னை பகுதிகளில் கொலை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, கற்பழிப்பு குற்றங்கள் அதிகம் நிகழ்ந்து உள்ளன. குடிசைப்பகுதிகள் மற்றும் ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகம் நடந்துள்ளன.

    தென்சென்னை, மேற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திருட்டு சம்ப வங்கள் அதிகம் நடந்து உள்ளன. சென்னை நகரம் முழுவதும் பரவலாக வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.

    இந்த வரைப்பட திட்டத்தின் மூலம் குற்றங்கள் ஒரு இடத்தில் நடைபெற்றால் அருகில் உள்ள ரோந்து போலீசாரை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து செல்ல வைக்க முடியும். மேலும் குற்றவாளி தப்பிச் சென்றால் அவர் எந்த வழியாக தப்பிச் சென்றார், அவரது உருவம் எந்த கேமராவில் துல்லியமாக பதிவாகி இருக்கும் என்பது போன்ற விவரங்களையும் புவியியல் தகவல் அமைப்பு வரைபடம் மூலம் தெளிவாக உடனடியாக கண்டறிய முடியும்.

    இதன் மூலம் ஒரு குற்றத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க முடியும். குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய முடியும். குற்ற சம்பவங்களை உடனடியாக தடுக்கும் நடவடிக்கைகளில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட போலீஸ் ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளது. சிறப்பு மொபைல் செயலியுடன் 2000 ரோந்து போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்த வரைபட திட்டத்தில் உள்ள தானியங்கி வாகன இருப்பிட அமைப்பானது குற்றம் நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள ரோந்து வாகனத்தை அனுப்புவதற்கு பயன்படுத்தப்படும். இதனால் போலீசாருக்கு நேரம் மிச்சமாவதுடன் விரைவாக சம்பவ இடத்தை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

    ரூ.6.5 கோடி மதிப்பு கொண்ட இந்த புவியியல் தகவல் அமைப்பு வரைப்பட திட்டத்தை போலீஸ் கமிஷன் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்,

    "சென்னை நகரில் நடக்கும் குற்றங்களின் முறைகள் மற்றும் அதன் போக்கை ஆய்வு செய்ய இது எங்களுக்கு உதவியாக இருக்கும். சென்னை நகரில் நடக்கும் பாலியல் குற்றங்கள், கற்பழிப்பு, போக்சோ குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போக்சோ குற்றங்கள் அதிக மாக இருந்தால் குற்றங்களை தடுக்க அந்த பகுதிகளுக்கு போலீசார் அதிக ரோந்து வாகனங்களை ஒதுக்கலாம். அந்த பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அல்லது அனைத்து பெண் போலீ சாரையும் போலீசார் நியமிக்கலாம்" என்றார்.

    Next Story
    ×