search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க.-வின் தோல்வி உறுதி-செல்வப்பெருந்தகை கணிப்பு
    X

    பா.ஜ.க.-வின் தோல்வி உறுதி-செல்வப்பெருந்தகை கணிப்பு

    • தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.
    • விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை மோடி அள்ளி வீசி வருகிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை இட்டுக்கட்டி பட்டியலின, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிற இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.

    இந்த பிரசாரத்தை செய்வதற்கு காரணம் உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின்படி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற ரகசிய அறிக்கை தான். அதன் காரணமாகவே மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து சிறுபான்மையினருக்கு எதிராக துவேஷ பிரசாரத்தை மிக மிக கீழ்த்தரமாக இழிவான முறையில் பிரதமர் மோடி செய்து வருகிறார்.

    காங்கிரசின் 60 ஆண்டு கால ஆட்சி வெறும் ஆட்சியே. ஆனால், தமது 10 ஆண்டுகால ஆட்சி தேசத்திற்கான சேவை என்கிறார். கடந்த 2019 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி உலக அரங்கில் ஏழாவது நாடாக கொண்டு வருவேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

    ஆனால், கடந்த 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2014-ல் 100 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் டாக்டர் மன்மோ கன்சிங் ஆட்சியில் இருமடங்கு வளர்ச்சி எட்டப்பட்டது.

    ஆனால், 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளில் ரூபாய் 200 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைந்திருக்க வேண்டும்.

    ஆனால், 2024-ல் அடைந்ததோ ரூபாய் 173 லட்சம் கோடி தான். மோடி கொடுத்த அறிவிப்பின்படி இருமடங்கு வளர்ச்சி எட்டப்படவில்லை.

    5 லட்சம் டிரில்லியன் டாலர் என்று சொன்னால் ரூபாய் 390 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2024 இல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சி பெற்றதோ ரூபாய் 173 லட்சம் கோடி தான்.

    இதன்மூலம் கொடுத்த வாக்குறுதியின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வளர்ச்சியை காட்டி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாத பிரதமர் மோடியின் பொருளாதார தோல்வி இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது.

    காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசிய பிரதமர் மோடி, நாள்தோறும் காங்கிரஸ் கட்சியை பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பேசி, பேசி நாட்டு மக்களிடையே பேசு பொருளாக மாற்றி விட்டார்.

    கடந்த காலத்தில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சு சமீப காலமாக பேசப்படுவதில்லை. ஏனெனில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.

    இதையெல்லாம் அறிந்த பிரதமர் மோடி, அச்சம், பீதியினால் மிகுந்த பதற்றத்துடன் எதை பேசுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் நினைவிழந்து விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.

    இத்தகைய பேச்சுகள் பா.ஜ.க.வின் தோல்வியை நாளுக்கு நாள் உறுதிபடுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயமாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×