search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    துணை முதலமைச்சராகும் உதயநிதி? - அமைச்சரவையிலும் அதிரடி மாற்றம்
    X

    துணை முதலமைச்சராகும் உதயநிதி? - அமைச்சரவையிலும் அதிரடி மாற்றம்

    • மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    • அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அடுத்தடுத்து பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் அவரது வெளிநாட்டு பயணம் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் ஆட்சியிலும், கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், விரைவாக பொருளாதார வளர்ச்சியை எட்டவும், அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கைகளை அவர் கையில் எடுத்துள்ளார்.

    சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ். அதி காரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் நிர்வாக ரீதியாக மேலும் சில மாற்றங்கள் செய்து விட்டு அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

    குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

    தற்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமனம் செய்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியேற்றி வைக்க உள்ளார்.

    அதன் பிறகு ஓரிரு நாளில் அவர் வெளிநாடு செல்வார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அமைச்சரவை மாற்றத்தின் போது சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. தங்கம் தென்னரசு உள்பட சில மூத்த அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. அவற்றை பிரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் அமைச்சரவையில் புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த புதுமுகங்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார் கள் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்ப அமைச்சரவையை மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது நிதி மற்றும் மின்சாரத் துறையை கவனித்து வருகிறார். இது அவருக்கு அதிக சுமையாக கருதப்படுகிறது. எனவே அவரிடம் உள்ள நிதி இலாகாவை வேறு ஒரு வருக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.

    ஏற்கனவே நிதி அமைச்ச ராக இருந்த பழனிவேல் தியாகராஜன் வசம் மீண்டும் நிதி இலாகா ஒப்படைக்கப்படும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவல்கள் தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த விறு விறுப்பை ஏற்படுத்தி உள்ளன.

    தி.மு.க.வில் உள்ள நடுத்தர வயதுள்ள பல எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர் பார்க்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமைச்சரவையில் சரியாக செயல்படாத சில ரை கட்சிப் பணிக்கு அனுப்பவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


    இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கு தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தீவிர கட்சி பணிகளிலும், ஆட்சி பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலின் போது அவர் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அவர் தனி கவனம் செலுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    அதுபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் 2 நாட்கள் அவர் செய்த பிரசாரம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. எனவே அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கும் பட்சத்தில் கட்சி பணிகளையும் மேம்படுத்த முடியும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.

    தமிழக சட்டசபைக்கு இன்னும் 1½ ஆண்டுகளில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் சுமார் 200 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டிப்பிடிக்க இப்போதே அதிரடி மாற்றங்களை செய்யத் தொடங்கி உள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தை மேலும் எளிமைப்படுத்தி விரைவு படுத்த முடியும் என்றும் கருத்து நிலவுகிறது. எனவே அடுத்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

    Next Story
    ×