search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி மாத பவுர்ணமியை யொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
    X

    ஆடி மாத பவுர்ணமியை யொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
    • விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு நாள் தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென் மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஆடி மாத பவுர்ணமி திதியை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இவர்கள் திருச்செந்தூர் கடல் மற்றும் நாழி கிணறு ஆகிய புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை நேரம் நெருங்க, நெருங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் கோவில் வளாகம் முழுவதும் சுற்றி வந்து கூட்டத்தை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். அவர்கள் தரிசனம் செய்ய தனி பாதை, கடற்கரை செல்வதற்கு தனி பாதை அமைக்கப் பட்டுள்ளது.

    பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதாரம், கழிப்பறை கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் தரிசனம் முடித்து இரவு கடற்கரை மணலில் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் நிலா சோறு சாப்பிட்டு இரவு முழுவதும் அங்கேயே தங்கினர்.

    இன்று அதிகாலை நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போலீசார் தெப்பக்குளம் அருகிலும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரே உள்ள இடத்திலும், ஐ.எம்.ஏ. ஹால் அருகிலும், தினசரி மார்க்கெட் பகுதி என 6 இடங்களில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    இந்நிலையில் விடுமுறை தினமான இன்றும் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடினர். பின்னர் அவர்கள் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×