search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வில் அதிரடி மாற்றம்: 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட  செயலாளர்
    X

    தி.மு.க.வில் அதிரடி மாற்றம்: 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்

    • கட்சி அமைப்புகளை மாற்றி அமைக்க திட்டம்.
    • வருகிற 16-ந்தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

    சென்னை:

    தி.மு.க.வில் அடுத்த சட்டசபை பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் கட்சி அமைப்புகளை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

    இப்போது தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் மூத்த அமைச்சர்கள், மூத்த மாவட்ட செயலா ளர்கள் பொறுப்பு வகிக்கும் மாவட்டங்களில் மட்டும் 5 சட்டசபை தொகுதிகள் இடம்பெற்று உள்ளன. மற்ற மாவட்டங்களில் இதைவிட தொகுதிகள் குறைவாக உள்ளது.

    இப்போது அதிகாரத்தை பரவலாக்கும் வகையில் சென்னையில் 3 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க தலைமை ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அதே வேளையில் வெளி மாவட்டங்களில் 2 சட்ட சபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கவும் பரிசீலனை நடந்து வருகிறது.

    இதற்கேற்ப 117 மாவட்டச் செயலாளர்களை கொண்டு வர தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வைத்துள்ளதாகவும் விரைவில் அதை செயல்படுத்த கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்புதல் பெறுவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் சென்னை கிழக்கு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படும் என தெரிகிறது.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் வசமிருக்கும் சென்னை தெற்கு மாவட்டம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் வசம் உள்ள காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், க.சுந்தர் எம்.எல்.ஏ. வசம் உள்ள காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மேலும் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை உருவாக்கும் திட்டம் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

    இதுதவிர தென்காசி மாவட்டம் விருதுநகர் மாவட்டம், கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களை மேலும் பிரித்து 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    ஒலிம்பிக் போட்டியை பார்க்க சென்றிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்ததும் ஓரிரு நாளில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் மாவட்டங்களை மேலும் பிரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. எனவே விரைவில் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் வரும் என தெரிகிறது.

    இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும் 2026 சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படக் கூடும் என தெரிகிறது.

    Next Story
    ×