search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் மோடியை கிண்டல் செய்வதே திராவிட மாடல்-டாக்டர் தமிழிசை கண்டனம்
    X

    பிரதமர் மோடியை கிண்டல் செய்வதே திராவிட மாடல்-டாக்டர் தமிழிசை கண்டனம்

    • வழக்கம் போல் கேலியும் கிண்டலும் பேசுவது தான் திராவிட மாடல்.
    • அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    சென்னை:

    முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைத்த வர்களை தலைகுனிந்து வணங்க வைத்திருக்கிறோம் என்று பெருமை பேசும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே கடந்த காலங்களில் திராவிட இயக்கத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அன்று திராவிட இயக்கத்தின் தலைவர் பெரியார் சமூக நீதிக்கு அரசியலமைப்புச் சட்டம் எதிரானது என்று அதை எரித்தார்.

    அதன் பின்னர் வந்த முன்னாள் முதல்வர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கிழித்து அவமரியாதை செய்தார்கள். அன்றைய சூழ்நிலையில் அச்சம்பவத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கிழிக்கவில்லை காகிதத்தை தான் கிழித்தோம் என்று கூறி வெளிவந்த வரலாறும் உண்டு.

    அப்படிப்பட்ட வரலாற்றில் வந்த தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்று அரசியலமைப்பை காக்கப்போகிறோம் என்று கூறுவது வேடிக்கை.

    ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடித்தார்கள், வெளிநடப்பு செய்தார்கள், வாக்குவாதம் செய்தார்கள், சபையில் கூச்சலிட்டார்கள், பாராளுமன்றத்திற்கு வெளியே சென்று மறியல் செய்தார்கள். இதைத்தவிர தமிழகத்திற்கு தி.மு.க. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்கு ஏதாவது செய்தார்களா?

    அதைத்தான் நான் முன்னரே கூறினேன் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் காதறுந்த ஊசிகள்... தைக்க உதவாது... குத்தத்தான் உதவும் என்று.

    அதைப்போல இன்றைக்கு வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வார்களே தவிர வழிநடத்த மாட்டார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாட்டு பயணத்தின் போது நியூயார்க் நகரத்தில் ஆற்றிய உரையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி அதற்கான பாதுகாப்பையும் நன் மதிப்பையும் உலகறிய செய்திருக்கிறார். இந்தியாவே கோவில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகமே புனித நூல் என்று கூறினார்.

    பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது மிகுந்த பெருமதிப்பும், மரியாதையும் வைத்துள்ளது உலகறிந்த செய்தி.

    இந்த முறை தேசிய ஜன நாயக கூட்டணி வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி வாக்குகளை பெற்றுக்கொண்டு மக்களை சமாதானப் படுத்துவதற்காக இப்போது இது போன்ற பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

    எந்த நிகழ்விலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றப்படும் என்று யாரும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

    மோடி பிரதமராக பதவிஏற்கும் முன்னர் உள்ளார்த்த பூர்வமாக இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கியதை வழக்கம் போல் கேலியும் கிண்டலும் பேசுவது தான் திராவிட மாடல்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×