search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி அருகே டிரோன் கேமிரா மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு
    X

    எடப்பாடி அருகே டிரோன் கேமிரா மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு

    • விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அண்மைக்காலமாக மர்ம விலங்கு அடித்து கொன்று வந்தது.
    • சில நாட்களாக வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்டது பக்க நாடு கிராமம். இப்பகுதியில் உள்ள கோம்பைக்காடு, ஓடுவங்காடு, சன்னியாசி முனியப்பன் கோவில், செங்குட்டப்பட்டி, குண்டு மலைக்கரடு உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில், விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அண்மைக்காலமாக மர்ம விலங்கு அடித்து கொன்று வந்தது.

    இதனை அடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் அங்கு பதிவாகியிருந்த கால் தடங்கள் மற்றும் அடையாளங்களை வைத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாடி வருவதை உறுதி செய்தனர். இதனை அடுத்து வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்தும், சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைத்தும் கடந்த சில நாட்களாக வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அவ்வப்போது கிராமப் பகுதிக்கு வருவதும், மீண்டும் அடர்ந்த வனத்திற்குள் சென்று பதுங்கி கொள்வதுமாக போக்கு காட்டி வந்த சிறுத்தையின் நடமாட்டத்தினை கண்காணிப்பதற்காக, அப்பகுதியில் டிரோன் கேமராவினை பறக்க விட்டு, கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும் சிறுத்தை பிடிபடும் வரை அப்பகுதி விவசாயிகள் கால்நடைகளை வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும், பொதுமக்கள் இயற்கை உபாதைக்காக வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும், குழந்தைகள், சிறுவர்களை தனியாக வெளியே அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொது மக்களுக்கு வனத்துறையினர் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×