search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 247-வது முறையாக பத்மராஜன் வேட்புமனு தாக்கல்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 247-வது முறையாக பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

    • வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    • பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகின்ற 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, விடுமுறை நாட்கள் தவிர மீதமுள்ள 13, 17-ந் தேதிகளில் என மொத்தம் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் நடைபெறும்.

    இதையடுத்து 18-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 20-ந் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    தொடர்ந்து பிப்ரவரி 5-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 8-ந் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் மட்டும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

    முதல் நபராக தேர்தல் மன்னன் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (64) என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    நான் இதுவரை 246 தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இது 247-வது தேர்தலாகும்.

    நான் இதுவரை 6 ஜனாதிபதி தேர்தல், 6 துணை ஜனாதிபதி தேர்தல், 33 பாராளுமன்றத்தேர்தல், 76 எம்.எல்.ஏ.க்கள் தேர்தல், மாநகராட்சி மேயர் தேர்தல், கவுன்சிலர் தேர்தல் என போட்டிட்டு உள்ளேன்.

    வாஜ்பாய், நரசிம்மராவ், கருணாநிதி, ஜெயலலிதா, சினிமா நடிகர் சரத்குமார் என பலரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.

    கடைசியாக கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த எம்.பி. தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு 286 வாக்குகள் பெற்றேன். தமிழகத்தில் கடைசியாக விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு 16 வாக்குகள் பெற்றேன்.

    கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 8 வாக்குகள் பெற்றேன். தேர்தலில் அதிக முறை போட்டிட்டதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளேன்.

    இன்னும் இந்தியாவில் எத்தனை தேர்தல் வந்தாலும் நான் உயிரோடு இருக்கும் வரை அனைத்து தேர்த லிலும் போட்டியிடுவேன்.

    தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்து அதற்காக பிரசாரம் எல்லாம் செய்ய மாட்டேன். எனது நோக்கம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது மட்டும்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் இன்று மதியம் வரை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களிடமிருந்து, தேர்தல் அலுவலர்கள் வேட்பாளர் படிவம், இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் டெபாசிட்தொகை ஆகியவற்றை சரி பார்த்தனர்.

    அதன்பின்னர், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ், வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களை பெற்றுக்கொண்டார்.

    இந்த நடைமுறைகள் முழுவதும் மாநகராட்சி அலுவலக வளாகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டது.

    மேலும், வேட்புமனு தாக்கலை முன்னிட்டு மாநகராட்சி அலுவலக நுழைவு வாசல் மற்றும் வளாகம் முழுவதும், ஈரோடு டவுன் டி.எஸ்.பி. முத்துக்கு மரன், இன்ஸ்பெக்டர் அனுராதா ஆகியோர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×