என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஈரோடு
- தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தமிழக-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது.
இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இந்த மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாக இந்த பகுதியில் 25 டன் வரை எடை உள்ள லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வருவதால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு கொண்ட லாரிகள் இயக்க அனுமதிக்கப்படுவதே ஆகும் என வாகன ஓட்டிகள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் புஞ்சை துறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நந்தகுமார் (24). இவரது பாட்டி சரஸ்வதி (62).
இந்த நிலையில் நந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தனது பாட்டி சரஸ்வதியை ஜம்பையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிளை நந்தகுமார் ஓட்டினார். அவரது பாட்டி சரஸ்வதி பின்னால் அமர்ந்து கொண்டு ஜம்பை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
இதை தொடர்ந்து உறவினர் வீட்டில் இருந்து துறையம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிளில் பாட்டியுடன் நந்தகுமார் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் இரவு நேரத்தில் துறையம்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஜம்பை கலுங்கு ஏரி அருகே உள்ள வளைவு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு கார் நந்தகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நந்தகுமார் மற்றும் அவரின் பாட்டி சரஸ்வதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொருங்கியது.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பவானி அருகே விபத்தில் பாட்டி, பேரன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
- இரவு நேரங்களில் சாலை ஓரமாக யானைகள் உலா வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவி லங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மழைக்காலங்கள் என்பதால் யானைகள் அதிகமாக இடம் பெயர்ந்து வருகின்றன.
தற்பொழுது வனத்துறையில் கிடைத்த தகவலின் படி கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானைக் கூட்டங்கள் மிகவும் அதிக அளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றன.
இதனால் ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள வனச்சாலையில் யானைகள் அதிகமாக தென்படுகின்றன. குறிப்பாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள வனச்சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலை ஓரமாக யானைகள் உலா வருகிறது.
இதனால் பண்ணாரி அம்மன் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எக்காரணம் கொண்டும் வாகனங்களை சாலையோரம் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்.
- மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கல் போன்று அமர்ந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரியாரின் புகழை உலகெங்கும் பரப்ப முதலமைச்சர் ஆர்வமாக உள்ளார். பெரியார் சொன்ன பலவற்றை அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, காமராஜர் சட்டங்களாக மாற்றியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சொன்னதை சட்டமாக கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் ஆளும் ஆட்சி சுயமரியாதை ஆட்சி.
பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும். ஆனால் இது எதுவும் இல்லை. அன்னப்பூர்ணா உரிமையாளர் ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்துங்கள் என சொன்னதற்கு, ஆளை வைத்து மிரட்டியும், தொலைபேசி மூலம் மிரட்டியும், மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம்.
மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கல் போன்று அமர்ந்துள்ளார். மனிதனை மதிக்கும் மனித தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை. இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களும், வியாபாரிகளும் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பாக செல்கிறார்கள். வரும் காலங்களில் இது பெரிதாக வெடிக்கும்.
டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கள்ளுக்கடைகளை திறப்பதால் உடல்நிலையை பாதிக்காது. பனை விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மதுவிலக்கில் பூர்ண நம்பிக்கை உள்ளது. கள்ளுக்கடையை திறந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது முழுவதும் எனது தனிப்பட்ட கருத்து.
கட்சியின் கொள்கையை தெரிவிக்காதவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்பவர்கள் மத்தியில் பல வருடங்களாக அரசியல் செய்து தமிழகம் முழுவதும் மக்களிடையே வாக்கு வைத்துள்ள திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என பேசியது தவறில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து கட்சிக்கும் இருப்பது நியாயம் தான்.
ஆட்சியில் பங்கு என்பது கையில் பவர் வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சியும் உள்ளன. எனவே திருமாவளவன் தெரிவித்தது தவறில்லை. ஆனால் 2026-ல் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு சாத்தியமாகாது. வரும் சட்டமன்ற தேர்தலில் மத வெறியர்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரவேண்டும் என தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் முதல் கடமையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வி என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது,
முதலமைச்சரின் வெளிநாடு பயணம் என்பது ஒவ்வொரு நாளும் ஓய்வு எடுக்காமல் தொழில் அதிபர்களை சந்தித்தார். இதில் போர்டு மோட்டார் இங்கிருந்து சென்றவர்கள் திரும்ப வருவதாக தெரிவித்தது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமானது.
இதேபோல் ராகுல்காந்தி குறித்து ஹெச்.ராஜா விமர்சனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு "ஹெச்.ராஜா ஓய்வு பெற வேண்டிய ஆளு. அண்ணாமலை வெளிநாடு போனதால் அவருக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற முடியாதவர். காலாவதியான ராஜா. காலாவதியான ராணியுடன் இருக்க வேண்டியவர். அவர் பொது இடத்தில் ராகுல் பற்றி சொல்வது தேவையற்ற விஷயம் என்றார்.
- வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர்.
- பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. அதிகபட்சமாக 109 டிகிரி வரை வெயில் பதிவானதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர். அதன் பிறகு பருவமழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இதனால் ஈரோடு மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திர வெயில் தோற்றுப்போகும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.
தொடர்ந்து 103 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் வெளியில் தாக்கத்தினால் புழுக்கம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். வெளியே செல்லும்போது தோல் எரிவது போன்று உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர், மோர், கரும்பு, குளிர பானங்களை மக்கள் அதிக அளவில் விரும்பி பருகி வருகின்றனர். மீண்டும் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என மக்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
- 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
- இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் மணமக்களை மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி, 1010 நெசவாளர் காலனியில் வசிப்பவர் கிருஷ்ணன், இவரது மகன் ரஞ்சித் குமார் (30). பெருந்துறை தனியார் பத்திர எழுத்தரிடம் பணியாற்றி வருகிறார்.
சென்னிமலை அடுத்துள்ள தகடூர், முருங்கையம்மன் கோவில் அருகில் வசிப்பவர் சரவணன். இவரது மகள் சுகன்யா (21). இவர்கள் இருவரின் குடும்பங்களும் முகாசிபிடாரியூர் 1010 காலனியில் அருகருகே வசித்த போது பழக்கம் ஏற்பட்டு 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறி சிவன்மலை மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
போலீசார் இருதரப்பு பெற்றோர்களுக்கு தகவல் சொல்லி வரவழைக்கப்பட்டு இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் மணமக்களை மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.
- ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
- மலைப்பாதையில் நின்ற யானை கூட்டத்தால் காரில் சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சில யானைகள் கூட்டம் வனப்பகுதி விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருகிறது. சில சமயம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியும் வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் வரட்சியான சூழ்நிலை நிலவி வருவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு உள்ளதா? என்று பார்ப்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை திம்பம் மலைப்பாதை 19-வது கொண்டை ஊசி வளைவில் யானைகள் குட்டியுடன் உலா வந்தது.
அவ்வழியாக சென்ற வாகனத்தை வழிமறைத்து உணவு ஏதும் உள்ளதா? என தேடியது. இதனல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் நின்ற யானை கூட்டத்தால் காரில் சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,
தற்போது யானைகள் கூட்டம் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக ஆசனூர் வனச்சரத்துக்குட்பட்ட திம்பம் 27 கொண்டை ஊசி வளைவுகளில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.
எனவே இந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்தக்கூடாது. அதேப்போல் யானை கூட்டத்தை கண்டால் அதனை செல்போன்களில் படம் எடுப்பதையும் நிறுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் செல்ல வேண்டும் என்றனர்.
- வன விலங்குகள் அணையின் தண்ணீர் உள்ள பகுதியில் வந்த தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கம்.
- சில வருடங்களுக்கு முன்பு அணையின் இருபுறம் முள்வேலி அமைக்கப்பட்டு நுழைவாயிலில் இரும்பு கதவு போடப்பட்டது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 42 அடியாகும். தற்போது அணை நிரம்பி வழியும் தருவாயில் உள்ளது. அணையின் மூலம் 2498 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணைக்கு நீர்வரத்தானது குன்றி உட்பட அடர்ந்த வனப்பகுதியில் பெய்யும் மழையால் குண்டேரிப்பள்ளம் அணை நிரப்பப்பட்டு இங்கு கட்லா, லோகு, சிலேப்பி உள்ளிட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டு பெரிதானதும் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வரும் நீரால் இந்த மீன்கள் வளர்வதால் ஆரோக்கியத்துடனும், சுவையாகவும் இருப்பதால் உள்ளூர் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குண்டேரிப்பள்ளம் மீன்களை வாங்கி செல்வது வழக்கம்.
மேலும் பண்டிகை காலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து குண்டேரிப்பள்ளம் அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் வருவர். அப்படி குண்டேரிப்பள்ளம் அணைக்கு வரும் பொது மக்கள் உணவு பொட்டலங்கள், பழவகைகள், எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வந்து மீதமாவதை அணைக்கு உள்ளும் அணையை ஒட்டிய பகுதியில் வீசி செல்கின்றனர்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சுற்றுலா பயணிகள் குண்டேரிப்பள்ளம் அணையில் வீசி செல்வதால் அணையின் நீர் மாசுபட்டு மீன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு இறக்க வாய்ப்பு உள்ளதால் சில வருடங்களுக்கு முன்பு அணையின் இருபுறம் முள்வேலி அமைக்கப்பட்டு நுழைவாயிலில் இரும்பு கதவு போடப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறி காட்டுயானை அணையின் நடைபாதை வழியாக வந்த நுழை வாயிலில் அமைக்கப்பட்ட இரும்பு கதவை உடைத்து நொறுக்கி தாறுமாறாக வீசி சென்றது.
குண்டேரிப்பள்ளம் அணை வனத்தையொட்டியே அமைந்துள்ளதால் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அணையின் தண்ணீர் உள்ள பகுதியில் வந்த தண்ணீர் குடித்து விட்டு செல்வது வழக்கம்.
ஆனால் அன்று இரவு யானை இரும்பு கதவை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் சுற்றுலா பயணிகளிடத்தில் அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் டி.என்.பாளையம் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டை அரசியலாக்க முயல்கின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று 5 புதிய பஸ் சேவைக்கான தொடக்க விழா நடைபெற்றது. தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு கொடியசைத்து வைத்து புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். ஒரே நாளில் ஒரு உத்தரவு போட்டு நானும், முதலமைச்சரும் டாஸ்மாக் மதுக்கடையை மூடி விடலாம். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதலமைச்சருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை.
மதுக்கடைகள் என்றைக்காவது ஒருநாள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதலமைச்சருடைய எண்ணம். ஆனால் உடனடியாக இதை செய்தால் என்ன நிலைமை வெளியில் ஏற்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
எனவே அப்படிப்பட்ட ஒரு கடுமையான சூழ்நிலையை மிக நிதானமாக அணுகி கொண்டு போக வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாக, முதலமைச்சரின் நோக்கமாக இருக்கிறது. எனவே நிச்சயமாக ஒரு கால கட்டத்தில் மக்களை அதில் இருந்து கொண்டுவரும்போது மதுக்கடைகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு முன்பு மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா?
பதில்:- இங்கு இருக்கின்ற நிலைமைகளை ஆலோசித்து, இங்கு இருக்கின்ற சூழ்நிலைகளை பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொருத்தவரை அவர்கள், அவர்களுடைய கொள்கை ரீதியான முடிவுக்காக ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அதில் எந்த தவறும் நாம் சொல்ல முடியாது. அவர்கள் அரசாங்கத்தை எதிர்த்து செய்கிறார்கள், முதலமைச்சரை எதிர்த்து செய்கிறார்கள் என்பது கிடையாது.
அதை அவர்களின் கொள்கையாக மக்களுக்கு எடுத்து செல்கிறார்கள். மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, இந்த உணர்வுகளை மக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து கொண்டு வந்து விட்டால் அரசாங்கம் அதை செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
கேள்வி:- விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்ததற்கு அ.தி.மு.க.வினர் சந்தோஷப்படுகிறார்கள். கூட்டணியில் மாற்றம் ஏற்படும், தங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமையும், பொறுத்திருந்து பாருங்கள் என்று பேச ஆரம்பித்து விட்டார்களே?
பதில்:- கல்யாணத்துக்கு அழைப்பு கொடுக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்று அர்த்தமா? எதிரிக்கு கூட கொடுக்கிறார்கள்.
கேள்வி:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறார்களே?
பதில்:- கூட்டணியில் மீண்டும் மாற்றம் வராது என்பது எங்களுடைய எண்ணம். அது எங்களுக்கு தெரிகிறது. ஒரு அழைப்பு கொடுத்தவுடன் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். அது ஏன் என்பது எங்களுக்கு தெரியவில்லை.
கேள்வி:- ஆளும் கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சிக்கு அழைப்பு கொடுத்தது எந்த விதத்தில் நியாயம் என்று நினைக்கிறீகள்?
பதில்:- அதை தப்பு என்று சொல்ல முடியாது. ஒரு பொதுவான நிகழ்வுக்காக, ஒரு திட்டத்துக்காக அழைக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம் என்று அவர்கள் பொதுவாகத்தான் அழைத்திருக்கிறார்கள். அது தப்பு கிடையாதே? அப்படி ஒரு அழைப்பு கொடுப்பதில் நாம் எப்படி தவறு கண்டு பிடிக்க முடியும்.
கேள்வி:- மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவது வெட்கக்கேடான விஷயம் என்று கூறி உள்ளாரே?
பதில்:- மாநாட்டுக்கு அ.தி.மு.க.வினரைத்தானே கூப்பிட்டு இருக்கிறார். தமிழக அரசே மதுக்கடையை ஏற்று நடத்துகிறது என்று அ.தி.மு.க.வினரிடம் சொல்வதற்காக இருக்கலாம். இது எப்போது நடந்தது தெரியும் தானே?
கேள்வி:- முதலமைச்சர் இல்லாத நேரத்தில் தான் இதுபோன்ற அழைப்பையெல்லாம் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கிறார்களே?
பதில்:- அப்படி இல்லை. முதலமைச்சர் உலகத்தில் எங்கிருந்தாலும் தமிழ்நாட்டை தினம்தோறும் கவனித்துக்கொண்டு இருக்கிறார். அவர் கோப்புகளை அங்கிருந்தே பார்த்து கையெழுத்து போட்டு அதுபற்றியெல்லாம் சொன்னார். அதனால் தூரமாக இருக்கிறார் என்று நாம் நம்பிக்கொண்டு எதையும் செய்துகொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. திருமாவளவன் அவரது கட்சியின் கொள்கைக்காக தெளிவாக செய்கிறார். அதில் குற்றம் கண்டுபிடிப்பது தவறு. அதை அரசிய ஆக்குவதற்கு மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.
கேள்வி:- வெளிநாட்டு மதுபான பார் அனுமதி தொடர்ந்து வழங்கப்படுகிறதே?
பதில்:- வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்கவில்லை. எங்கெல்லாம் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் தான் கொடுக்கிறோம். வெளிநாட்டு மதுபான பார்களுக்கு நிறைய அனுமதி கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. டாஸ்மாக் கடையை அப்படியே வைத்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதும் எங்கள் நோக்கம் அல்ல.
டாஸ்மாக் கடைகளை மூடும்போது வேறு விதமான ஒரு இடத்துக்கு அவர்கள் போய் தவறாக பிரச்சனையாகி விடக்கூடாது என்பதை மனதில் வைத்து தான் அதற்கு அடிப்படையாக சில மாற்றங்களை செய்து அவர்களை ஒழுங்குபடுத்தி நம்முடைய இடத்துக்கு கொண்டு வந்து விட்டு அப்புறம் படிப்படியாக செய்ய வேண்டும். அந்த நோக்கத்தை நிச்சயமாக எல்லோரும் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்கக்கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார்.
- உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் வரும் 24-ந் தேதி வரை 5 பிரிவுகளின் கீழ் நடைபெறுகின்றது. போட்டியில் தமிழகம் முழுவதும் 11.56 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 21,626 பேர் பதிவு செய்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கையில் போட்டிகளை தொடங்கி வைத்துள்ளார். முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.
ஈரோடு சோலாரில் ஒரு விளையாட்டு அரங்கம் உருவாக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஒப்புதல் தந்துள்ளார். அதற்கான பணிகள் தொடக்கப்பட்டுள்ளன. சி.என்.சி. கலை அறிவியல் கல்லூரியில் ஒரு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு துறை அமைச்சர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.
மதுவிலக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு கொள்கை தளர்த்தப்பட்டது. இந்த அரசு காலத்தில் அல்ல அது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதனால் கூட்டணியில் இருந்து கொண்டு அவர் தி.மு.க.வை எதிர்ப்பதாக கருதக்கூடாது.
அவர் அவரது கருத்தை, கோரிக்கைகளை தெரிவிக்க மாநாட்டை நடத்துகிறார். மதுவிலக்கு பிரசாரத்திற்கு 5 கோடி ரூபாய் இந்த அரசு ஒதுக்கி உள்ளது. இது படிப்படியாக தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்படும்.
உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கப்படாத மனைகள் மற்றும் கட்டிடங்களை வரைமுறைப்படுத்த சில நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி விண்ணப்பங்கள் மட்டும் தற்போது பெற உத்தரவிட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகள், கட்டிடங்கள் குறித்து கண்டறிய மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கீகரிக்கப்படாத பள்ளி கட்டிடங்கள் வரைமுறைப்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இன்று காலை பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
- கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.
இன்று காலை பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை நீர்மட்டம் 95.25 அடியாக உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கன அடியும், காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 100 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது.
இதைப்போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 3 ஆயிரத்து 250 கன அடி தண்ணீர் பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுபள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.
41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது. இதேபோல் 33.47 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.17 அடியாக உள்ளது.
- குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.
- 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து தொடர்ந்து நீர்வரத்தை விட பாசனத்திற்காக அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6,431 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. காலை நிலவரப்படி பவானி சாகர் அணை நீர்மட்டம் 95.78 அடியாக உள்ளது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 750 கனஅடி, காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2,300 கனஅடி என மொத்தம் 3,350 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதன் காரணமாக குண்டேரிப்பள்ளம், வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது.
41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 40.38 அடியாக உள்ளது. இதேபோல் 33.47 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.17 அடியாக உயர்ந்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்