search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் வெண்டைக்காய்களை சாலையில் கொட்டும் விவசாயிகள்

    • வழக்கமாக வெண்டைக்காய் பறிப்பதற்கு ஒரு தொழிலாளிக்கு ரூ.250 கூலியாக வழங்குவோம்.
    • நாங்கள் விளைவித்த காய்கறிகளை பறிக்காமல் அப்படியே எங்களது கால்நடைகளுக்கு தீவனமாக்க முடிவு செய்து ஆடு, மாடுகளை மேய விட்டுள்ளோம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பகுதி மக்கள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நெல்லை டவுன் மொத்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்த தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளப்பநேரி கிராமத்தில் தற்போது வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் வியாபாரிகள் மார்க்கெட்டிற்கு அதனை மூட்டைகளில் கொண்டு வந்தனர். ஆனால் அங்கு ரூ.2 -க்கு மட்டுமே ஒரு கிலோ விற்பனையானது. இதனால் விவசாயிகள் மனவேதனை அடைந்தனர். இதேபோல் அந்த பகுதிகளில் தக்காளி விளைவித்த வியாபாரிகளுக்கும் ரூ.5 வரை மட்டுமே தக்காளி விலை போனதால் அவர்களும் வருத்தம் அடைந்தனர்.

    இதனால் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்டவற்றை சாலைகளில் கொட்டினர். இந்த காட்சிகளை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். அவற்றில் விவசாயிகள் தங்களது மனக்குமுறலையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

    இதுதொடர்பாக விவசாயி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நாங்கள் பல ஆண்டுகளாக வெண்டைக்காய் பயிரிட்டு வருகிறோம். வழக்கமாக வெண்டைக்காய் பறிப்பதற்கு ஒரு தொழிலாளிக்கு ரூ.250 கூலியாக வழங்குவோம். ஒரு தொழிலாளி 40 கிலோ முதல் 45 கிலோ வரை ஒரு நாளைக்கு பறிப்பார்.

    அவற்றை சாக்குமூட்டைகளில் கட்டி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல சாக்குக்கு மட்டும் ரூ.40 செலவாகிறது. ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் வரை செலவாகும் நிலையில் மார்க்கெட்டில் இன்று ஒரு மூட்டையின் விலை ரூ.100-க்கும் குறைவாகவே உள்ளது. இதேபோல் தக்காளியும் கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது. பனிப்பொழிவு காரணமாக அவையும் செடிகளிலேயே கறுப்பாகி விடுகிறது. பறிப்பதற்கு முன்பாகவே அவை அழுகி விடுகிறது. அவ்வாறு பத்திரமாக பாதுகாத்து பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றாலும் 5 ரூபாய்க்கு மேல் விலை போகவில்லை.

    இதனால் நாங்கள் விளைவித்த காய்கறிகளை பறிக்காமல் அப்படியே எங்களது கால்நடைகளுக்கு தீவனமாக்க முடிவு செய்து ஆடு, மாடுகளை மேய விட்டுள்ளோம். காய்கறி பயிர்களுக்கு அரசு நிலையான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே எங்கள் நிலை மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×