என் மலர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் மீண்டும் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும்.
- கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானில் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி வரை கடும் பனிக் காலம் நிலவும். இந்த சீசனில் கொடைக்கானலுக்கு உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
டிசம்பர் மாத இறுதியில் உறை பனி சீசன் நிலவுவதால் காஷ்மீரில் இருப்பது போன்று பனிக்கட்டிகள் வீடுகள் மீதும், வாகனங்கள் மீதும் உறைந்து காணப்படும். இது போன்ற சீதோஷ்ணத்தை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவார்கள்.
இதன்படி கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் பனியையும் பொருட்படுத்தாது அனைத்து சுற்றுலா தலங்களிலும் தங்கள் பொழுதை உற்சாகமாக கழித்து வந்தனர்.
நேற்று இரவு முதல் கொடைக்கானலில் மீண்டும் உறை பனி தொடங்கியுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் உறை பனி படர்ந்து வெள்ளை கம்பளம் விரித்தது போல காணப்பட்டது. செடிகள் மீதும் உறை பனி படர்ந்து இருந்ததால் பச்சை நிறம் தெரியாத அளவுக்கு காணப்பட்டது. உறை பனியால் சாலையோர வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளான நிலையில் குப்பைகளை எரித்து குளிர் காய்ந்து வந்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகளும் அதிகாலை நேரத்தில் வெளியே வராமல் விடுதியிலேயே முடங்கி கிடந்தனர். இன்று காலை நிலவரப்படி கொடைக்கானலில் 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது. வரும் நாட்களில் இது மேலும் 0 டிகிரியாக குறையலாம் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் ஓரளவு குறைந்துள்ள நிலையில் பகல் பொழுதில் வெளியே வர முடியாமல் மதிய நேரத்துக்கு பிறகே வெளியே வருகின்றனர்.
மேலும் கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையால் கடும் பனி மூட்டம் நிலவி எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் உறை பனி, பனி மூட்டத்தால் பள்ளிக்கு செல்லும மாணவ-மாணவிகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் நகர மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.