search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை: 4 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
    X

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை: 4 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

    • ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர், களக்காடு, அம்பை, சேரன்மகாதேவி, வீரவநல்லூர், முக்கூடல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, மேலச்சவல் பத்தமடை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    முக்கூடல் பகுதியில் இருந்து கடையம் நோக்கி செல்லும் சாலையில் இடை கால் அருகே சாலையில் முழங்கால் அளவுக்கும் மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் நேற்று இரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    24 மணி நேரமாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந் துள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை 2 நாட்களாக பெய்து வருவதால் களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் அம்பை சுற்றுவட்டாரத்தில் சுமார் 22 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதே போல் பாப்பாக்குடி, இடைகால், சீதபற்ப நல்லூர், வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வீரவநல்லூர் பகுதியில் 25 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் சரகம் புதூர் அருகே நான்கு வழி சாலையில் உள்ள முதியோர், பெண்கள் காப்பகம் ரோட்டின் தாழ்வான பகுதியில் உள்ளதால் மழை தண்ணீர் சூழ்ந்தது. முதியோர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    நெல்லை மாநகரப் பகுதியில் நெல்லையில் மட்டும் 20 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. இதன் காரணமாக முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாநகரில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக டவுன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    டவுன் முகமது அலி தெருவில் நேற்று நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. டவுன் காட்சி மண்டபம் பகுதியில் தடிவீரன் கோவில் தெரு, செண்பகம் பிள்ளை தெரு உள்ளிட்ட ஏராளமான தெருக்களில் மழை நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர்.

    காட்சி மண்டபம் அருகே உள்ள ஊசி மாடன் கோவில்களுக்குள் தண்ணீர் புகுந்தது. நெல்லையப்பர் கோவில் ரத வீதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கி கிடந்தது. நெல்லையப்பர் கோவிலில் வடக்கு மண்டபம் பகுதியில் தண்ணீர் புகுந்தது.

    டவுன் குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்தபடி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    பாளையங்கோட்டை பகுதியிலும் மனக்காவலம் பிள்ளை நகரில் ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. அதிகாலையில் புகுந்த வெள்ள நீர் காரணமாக தங்கள் குழந்தைகளுடன் கடும் சிரமத்துக்கு இடையே பொதுமக்கள் வெளி யேறினர்.

    இதேபோல் கே.டி.சி நகரில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநகரின் விரிவாக்க பகுதிகளிலும் மழை நீர் தேங்கி கிடப்பதால் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் சுமார் 2000 வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் நேற்று இரவு வரை பெய்த மழையிலேயே பஸ் நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இன்று அதிகாலை 3 மணி அளவில் பஸ் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள சிந்து பூந்துறை தெருவில் வெள்ள நீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதி அடைந்தனர். அங்கும் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

    நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள வங்கி கட்டிடத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பேட்டை பழைய பேட்டை இணைப்பு சாலையில் வெள்ளநீர் கரை புரண்டு வருவதால் அங்குள்ள ஆதாம் நகர் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    இதேபோல் மாநகரின் பெரும்பாலான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அவற்றை தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று அப்புறப்படுத்தி னர். ஒரு சில இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டாலும் மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அவற்றை சரி செய்தனர்.

    டவுன் மேலநத்தம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் தெரியாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதன் காரணமாக மேலப்பாளையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் அந்த சாலை ஆனது துண்டிக்கப்பட்டது. இன்று காலையில் மழை சற்று குறைய ஆரம்பித்த நிலையில் ஏராளமான பொது மக்கள் தரைபாலத்தை பார்வையிட்டனர்.

    இதே போல் ஆபத்தை உணராமல் வண்ணார் பேட்டை கொக்கிரகுளம் ஆற்று பாலம், வடக்கு புறவழிச்சாலை ஆற்று பாலங்களில் நின்றபடி வெள்ளத்தை கண்டு ரசித்தனர். ஏராளமானார் தங்களது செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டதையும் காண முடிந்தது.

    கோவில்பட்டி பகுதியில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை இடை விடாது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் கோவில்பட்டி நகர் முழுவதும் சாலை களில் மழைநீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகத்தின் பின்பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் வளாகம் முழுவதும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. அங்குள்ள கார் இருசக்கர வாகனங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

    அப்பகுதியில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் மழை நீர் உள்ளே புகுந்து வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், டி.வி., வாஷிங் மெஷின், பிரிட்ஜ் போன்ற பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூங்காமல் கண்விழித்து இருந்துள்ளனர். தங்களது குழந்தைகளை அருகில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு விட்டுள்ளனர்.

    பழனி ஆண்டவர் கோவில் அருகே உள்ள நீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் குறிஞ்சான் குளத்திற்கு செல்ல வேண்டிய மழைநீர் குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. அதுமட்டுமல்லாது இ.எஸ்.ஐ.மருந்தக வளாகத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீரும் வீடுகளுக்குள் புகுந்து வரும் சூழ்நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

    கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 22-வது வார்டு பகுதியில் உள்ள காமராஜர் தெரு பகுதியில் உள்ள 20 வீடுகளில் மழைநீர் உள்ளே புகுந்துள்ளது. வீட்டில் இருந்த சமையல் பொருட்கள், கியாஸ் சிலிண்டர் அனைத்துமே மழைநீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் புது ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    பலத்த மழையின் காரணமாக இனாம் மணியாச்சி, அத்தைக்கொண்டான் கண்மாய்கள் முழுவதும் நிரம்பி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் இளையரசனேந்தல் சாலையில் மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    அந்த பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ்கள் வெளியே வர முடியாமல் உள்ளன. மேலும் அண்ணா பஸ் நிலையத்திற்குச் சென்ற அரசு பஸ் மழைநீரில் சிக்கி வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளது.

    அதேபோன்று அப்பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க், லாரி செட்டுகள், தனியார் நிறுவனங்களிலும் மழை நீர் புகுந்து வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி மாவட்டத்திலும் நேற்று அதிகாலையில் தொடங்கிய மழை இன்று காலை 9 மணி வரையிலும் பரவலாக பெய்தது. சிறிது நிமிடங்கள் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் வறண்டு கிடந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அந்த குளங்களில் 70 சதவீதம் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

    ஏற்கனவே குறைந்த அளவு தண்ணீர் கிடந்த குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளது.

    பல ஆண்டுகளாக நிரம்பாத குளங்கள் கூட நிரம்பி உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஒரு சில இடங்களில் கோவில்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நேர் புகுந்தது. 2 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் சாலை துண்டிக்கப்பட்டது. அங்குள்ள புது குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பிய நிலையில் மறுகால் பாய்ந்ததால் மெயின் ரோட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    ஆலங்குளம் பஞ்சாயத்து அலுவலக தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த பகுதியில் தெருக்களில் காட்டாற்று வெள்ளம் போல் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

    சங்கரன்கோவில், திருவேங்கடம், கரிவலம்வந்தநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி, கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்ததன் காரணமாக ஏராளமான குளங்கள் நிரம்பியது. முக்கிய இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இது தவிர தென்காசி மாவட்டம் ராமநதி, கடனாநதி அணைகளில் இருந்தும் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்படுவதால் தாமிரபரணி ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய்கள் மூலமாகவும் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வருவதால் இன்று காலை நிலவரப்படி 60 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

    இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி களில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அரசு நிவாரண முகாம்களுக்கு வந்து தங்கவும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவுறுத்தி உள்ளார்.

    Next Story
    ×