search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர், பந்தலூரில் கொட்டி தீர்த்த கனமழை: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்
    X

    கூடலூர், பந்தலூரில் கொட்டி தீர்த்த கனமழை: 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

    • இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
    • பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.

    நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

    பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.

    மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.

    அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

    இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

    நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

    இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.

    தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.

    கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×