search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் கொட்டி தீர்த்த கனமழை
    X

    பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் கொட்டி தீர்த்த கனமழை

    • சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
    • வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று மாலை வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆழியார், சின்னக்கல்லார், முடிஸ் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இரவிலும் மழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையிலும் மழை பெய்து வருகிறது.

    தொடர் கனமழைக்கு வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 23-வது மற்றும் 24-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே உள்ள பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. அத்துடன் மரம் ஒன்றும் முறிந்து விழுந்தது.

    இதனால் அந்த பகுதியில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும் செல்லும் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த கற்கள் அகற்றப்பட்டன.

    காலை 8.30 மணிக்கு பிறகு பணிகள் அனைத்தும் முடிந்ததும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.

    வால்பாறை அண்ணா நகர் பகுதியில் முருகன் என்பவரின் வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    முடிஸ் மற்றும் முருகாளி எஸ்டேட் பகுதியில் மரம் விழுந்தது. இதனை அப்பகுதி மக்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.

    தொடர் மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    வால்பாறை சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 23 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வால்பாறையில் தொடரும் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×