என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் சிசுவை புதைத்ததாக தகவல்:  தருமபுரி அருகே தம்பதியிடம் போலீஸ் விசாரணை
    X

    பெண் சிசுவை புதைத்ததாக தகவல்: தருமபுரி அருகே தம்பதியிடம் போலீஸ் விசாரணை

    • பெண் சிசு வீட்டின் அருகே யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டதாகவும் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை தோண்டி பார்த்தனர்.ஆனால் அங்கு பெண் சிசுவின் உடல் இல்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ளது பி. மோட்டுப்பட்டி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மனைவி பெருமா. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருமாவிற்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்ததாகவும், அந்த பெண் சிசு வீட்டின் அருகே யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டதாகவும் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளி கிருஷ்ணாபுரம் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு, தருமபுரி தாசில்தார் சரவணன் மற்றும் போலீசார் பி.மோட்டுப்பட்டிக்கு நேரில் சென்று பெருமா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது தங்களுக்கு 3- வது பெண் சிசு பிறக்கவில்லை என்று முத்துகிருஷ்ணனும், பெருமாவும் கூறியுள்ளனர். இருப்பினும் சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.

    அங்கு பெண்சிசு புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தை தோண்டி பார்த்தனர்.ஆனால் அங்கு பெண் சிசுவின் உடல் இல்லை. இதனால் போலீசாரும், வருவாய்த்துறையினரும் அங்கிருந்து திரும்பினர்.

    இதையடுத்து முத்துகிருஷ்ணன்-பெருமா தம்பதிக்கு உண்மையில் 3-வதாக பெண் சிசு பிறந்து அதை கொன்று புதைத்தார்களா அல்லது யாராவது தவறான தகவல் கொடுத்துள்ளார்களா? என்று கிருஷ்ணாபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முத்துகிருஷ்ணன் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×