search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் கலவர கல்வீச்சில் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாருக்கு அமைச்சர்கள் ஆறுதல்
    X

    கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாரை அமைச்சர்கள் எ.வ.வேலு,அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வெ. கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    சின்னசேலம் கலவர கல்வீச்சில் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாருக்கு அமைச்சர்கள் ஆறுதல்

    • சின்னசேலம் கலவர கல்வீச்சில் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாருக்கு அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
    • அலுவலகங்களில் இருந்த சான்றிதழ்கள் முற்றிலும் எரிந்து நாசமானதை பார்வையிட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி இறப்பால் பள்ளியில் வன்முறை சம்பவம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி மற்றும்தொழிலாளர்கள் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அமைச்சர்கள் வகுப்பறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அலுவலகங்களில் இருந்த சான்றிதழ்கள் முற்றிலும் எரிந்து நாசமானதை பார்வையிட்டனர். மேலும் அலுவலகம் எதிரில் நிறுத்தப்பட்டிருந்த கார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் ஆகியவை முற்றிலும் எறிந்து போனதையும், கட்டிடங்களுக்கு தீ வைத்துக் கொளுத்த ப்பட்டிருப்பதையும் பார்வையிட்டனர். தொடர்ந்து மாணவி ஸ்ரீமதி தங்கி இருந்த 3-வது மாடியில் உள்ள அறையை பார்வையிட்டனர்.

    அங்கிருந்து எப்படி கீழே விழுந்திருப்பார், எங்கே விழுந்தார் என்பது குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்தார். இதேபோல் பள்ளியில் சுவற்றில் ரத்தக்கறை உள்ளதாக சமூக வலைதலங்களில் கூறப்பட்டது குறித்து அமைச்சர் எ.வ. வேலு கேட்டறிந்தார். அதற்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2019 இல் இருந்து இந்த கரை இருப்பதாக கூறினர். தொடர்ந்து ஆய்வு முடித்து விட்டு அமைச்சர்கள் புறப்பட்டபோது அங்கு வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அமைச்சரை சந்தித்து எங்கள் பிள்ளைகள் இதே பள்ளியில் படிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர் இது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது கல்வீச்சில் காயம் அடைந்து சிகிச்சை பெறும் போலீசாருக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் கூறினர். அப்போதுகாவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) தாமரைக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×