search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைனில் ஐ.பி.எல். டிக்கெட் தருவதாக ரூ.90 ஆயிரம் மோசடி- போலீசார் விசாரணை
    X

    ஆன்லைனில் ஐ.பி.எல். டிக்கெட் தருவதாக ரூ.90 ஆயிரம் மோசடி- போலீசார் விசாரணை

    • கிரிக்கெட் பார்க்கும் ஆசையில் ஒருவர் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க ஆசைப்பட்டு, ரூ.90 ஆயிரத்தை இழந்துள்ளார்.
    • அருண்குமார், ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி அணிகள் மோதுகின்றன. போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். நேற்று முன்தினம் இதற்கான டிக்கெட் விற்பனை நடந்தது. டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

    ரசிகர்களின் ஆர்வத்தை பயன்படுத்தி அதிக விலைக்கு கள்ள டிக்கெட் விற்கப்படுகிறது. இதுபோல் கள்ள டிக்கெட் விற்பவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். இதுவரை போலீசார் நடத்திய வேட்டையில் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கிரிக்கெட் பார்க்கும் ஆசையில் ஒருவர் ஆன்லைன் மூலம் டிக்கெட் எடுக்க ஆசைப்பட்டு, ரூ.90 ஆயிரத்தை இழந்துள்ளார்.

    அவர் பெயர் அருண்குமார் (வயது 32). சென்னை திருவல்லிக்கேணி, டி.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் கியூவில் நின்று டிக்கெட் எடுக்க முயற்சித்துள்ளார். டிக்கெட் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் 'இன்ஸ்டாகிராம்' பக்கம் ஒன்றில் ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் தேவைப்படுபவர்கள் அணுகலாம், என்ற விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மூலம் ரூ.90 ஆயிரம் அனுப்பி 20 டிக்கெட்டுகள் கேட்டுள்ளார். ஆனால் டிக்கெட் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். அது மோசடி என்று தெரியவந்தது.

    இதுகுறித்து அருண்குமார், ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபோல் ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×