search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியாவில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது - மத்திய மந்திரி பெருமிதம்
    X

    ஜோதிராதித்ய சிந்தியா

    இந்தியாவில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளது - மத்திய மந்திரி பெருமிதம்

    • பிரதமர் மோடியின் ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.
    • 100 ஆண்டில் நாம் பார்க்காத மாற்றங்களை கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், புதிய இந்தியா-பல வாய்ப்புகள் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    உலக அளவில் மற்ற நாடுகளுக்கு சேவை செய்வதில் இந்தியா முன்னோடியாக இருந்து வருகிறது. 100 ஆண்டுகளில், நாம் பார்க்காத மாற்றங்களை, கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    இன்று உலகளாவிய பிரச்சினைகளுக்கு இந்தியாவை நாடி வரும் சூழல் உண்டாகியுள்ளது. உக்ரைன், ரஷியா போர் பிரச்சினைக்கு, இந்தியாவால்தான் தீர்வு கொண்டுவர முடியும் என்ற சூழல் உலகளவில் உருவாகியுள்ளது.

    விமான போக்குவரத்து துறையைப் பொறுத்தவரை உலகில் இரண்டாவது உள்நாட்டு பயண போக்குவரத்து கொண்ட நாடாக இந்தியா உள்ளது. சர்வதேச அளவில் பயணிகள் போக்குவரத்தில் 7-வது இடத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்த 67 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடியின் கடந்த எட்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் புதிதாக 73 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 147 விமான நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. இந்த மாதம் பிரதமர் மோடி 148-வது விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார்.

    அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் மொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200-க்கும் மேல் கொண்டு செல்ல திட்டம் உள்ளது. 2013-ல் 400 விமானங்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 700 ஆக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1500 ஆக அதிகரிக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது.

    உலக அளவில் 5 சதவீதம் பெண் விமானிகள் உள்ள நிலையில் இந்தியாவில் 15 சதவீத பெண் விமானிகள் உள்ளனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு பெண்கள் பங்களிப்பு முக்கியமானது. இளைஞர்கள், பெண்கள் இணைந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×