search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழா பெண் குழந்தை பாதுகாப்பு வைப்புத்தொகை பத்திரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்
    X

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு வைப்புத் தொகை பத்திரம் கலெக்டர் பழனி வழங்கினார்.

    கருணாநிதி நூற்றாண்டு விழா பெண் குழந்தை பாதுகாப்பு வைப்புத்தொகை பத்திரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

    • பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது.
    • 2-ம் கட்டமாக 550 குழந்தைகளுக்கும் முதிர்வுத் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. அவர் பேசியதாவது,

    முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 31.12.2001 முதல் ரூ.15,200/- தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் நிலையான வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்பட்டு நிலையான வைப்புத் தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. 01.08.2011 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையின் பெயரில் ஒரு பெண் குழந்தை உள்ள குடும்பத்திற்கு ரூ.50,000/- மற்றும் 2 பெண் குழந்தைகள் மட்டும் உள்ள குடும்பத்திற்கு தலா ரூ.25,000/- என உயர்த்தி தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் நிலையான வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்பட்டு நிலையான வைப்புத் தொகை பத்திரம் நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட டெபாசிட் தொகையானது பெண் குழந்தைகளின் கல்வித் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் 6-வது ஆண்டு வைப்புத் தொகையிலிருந்து ஆண்டுதோறும் ரூ.1800/- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. மேற்கூறிய வைப்புத்தொகை ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்தவுடன் பெண் குழந்தைக்கு வட்டியுடன் சேர்த்து வைப்புத் தொகை வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2001 முதல் 2005 வரை பதிவு செய்யப்பட்டு 18 வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கு முதல் கட்டமாக 2,858 குழந்தைகள் மற்றும் 2-ம் கட்டமாக 550 குழந்தைகளுக்கும் முதிர்வுத் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.

    தற்பொழுது, 1,174 குழந்தைகளுக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் பெயர் பட்டியல் வரப்பெற்றுள்ளது. அக்குழந்தைகளுக்கும் முதிர்வு தொகை பெற்று வழங்கப்படும். நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 57 பயனாளிகளுக்கு வைப்புத் தொகை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், நலத்திட்ட உதவிகள் பெற்றவர்கள், தங்கள் பெண் பிள்ளைகளின் எதிர்கால தேவைக்கு இத்தொகையினை பயன்படுத்திட வேண்டும் என கலெக்டர் பழனி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×