search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பரணி வித்யாலயா மாணவி 2 தங்கப்பதக்கங்கள் பெற்று சாதனை
    X

    பரணி வித்யாலயா மாணவி 2 தங்கப்பதக்கங்கள் பெற்று சாதனை

    • பரணி வித்யாலயா மாணவி 2 தங்கப்பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தார்
    • தேசிய ஜூனியர் சாப்ட் டென்னிஸ்

    கரூர்:

    17-வது தேசிய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டி அண்மையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் கரூர் பரணி வித்யாலயா மாணவி சுஷ்மிதா முருகேஷ் , தமிழக அணியின் சார்பாக பங்கு பெற்று தனி இரட்டையர் பிரிவில் ஒரு தங்கப்பதக்கம், தமிழக அணியின் குழுப்பிரிவில் ஒரு தங்கப்பதக்கம் என மொத்தமாக 2 தங்கப்பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.

    இதைத் தொடர்ந்து லக்னோவில் நடந்த பாராட்டு விழாவில் சாதனை மாணவி கரூர் பரணி வித்யாலயா சுஷ்மிதா முருகேஷ்க்கு உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியா வெற்றிக் கோப்பையை வழங்கி பதக்கங்கள் அணிவித்து பாராட்டினார்.

    இதைத் தொடர்ந்து பள்ளிக்கு திரும்பிய சுஷ்மிதா முருகேஷ் மற்றும் அவருக்கு டென்னிஸ் பயிற்சியளித்த பயிற்சியாளர்கள் மோகன் வினோத்குமார் ஆகியோருக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், தாளாளர் மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் சுபாஷினி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன் சிறப்புரையாற்றுகையில், மாணவர்கள் சிறு வயது முதல் படிப்பு மற்றும் விளையாட்டு இரண்டிலும் தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார்கள். மாணவி சுஷ்மிதா போன்று அனைத்து மாணவர்களும் அவரவர்க்கு விருப்பமான துறையில் வெற்றி பெற முயற்சி செய்ய வேண்டும்' என்று கூறினார். பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி பார்க் முதல்வர் சேகர் மற்றும் இருபால் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினர்.

    Next Story
    ×