என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாக்யா பாராமெடிக்கல் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கொண்டாடும் நட்சத்திரம் விருது வழங்கும் விழா
- பாக்யா பாராமெடிக்கல் சார்பில் மாற்றுத்திறனாளிகள் கொண்டாடும் நட்சத்திரம் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- நிறுவனர் ஜெயபாண்டி பேசினார்
கரூர்:
கரூர், கோவை சாலையில் உள்ள பாக்கியா கல்வி அறக்கட்டளை, பாக்யா பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட் மற்றும் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளை கொண்டாடும் வகையில் நம்பிக்கை நட்சத்திரம் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணி, உடற்கல்வி ஆசிரியர் புலியூர் வீர.திருப்பதி, எஸ்போ ப்ரைட் பிரைவேட் லிமிடெட் சிவக்குமார், வெள்ளியணை அரசு பள்ளி ஆசிரியர் சுபாஷினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பாக்கியா கல்வி அறக்கட்டளை மற்றும் பாக்யா பாராமெடிக்கல் இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர் ஜெயபாண்டி பேசுகையில், நீங்கள் மாற்று திறனாளிகள் அல்ல, உலகையே மாற்றும் திறனாளிகள். அங்கத்தில் குறை இருந்தாலும் அகத்தில் குறை இல்லாதவர்கள், உடலில் குறை இருந்தாலும், உள்ளத்தில் குறை இல்லாதவர்கள், குறை கண்டு கலங்காதவர்கள். வாய்ப்புகள் வழங்கினால் ஒளிருவார்கள். பரிசுகளும், பதக்கங்களும் பெறுவார்கள். பலரின் பாராட்டுக்கு உரியவர்கள் என்றார். முடிவில் வசந்தா செல்வகுமாரி நன்றி கூறினார். நிகழ்ச்சியை நந்தகுமாரி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாக்கியா கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.






