என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொளத்தூர் ஏரி சீரமைப்பு பணிகள்- அமைச்சர் நேரில் ஆய்வு

- 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரியின் முன்னேற்ற பணிகள் குறித்து இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலர் சிவஞானம், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் கணேசன், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சி.எம்.டி.ஏ. சார்பில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். கொளத்தூர் ஏரியில் ரூ. 6.26 கோடி செலவில் முக்கிய அம்சங்களாக நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், ஒளிரும் மீன் சிற்பங்கள், இசை பூங்கா, தனித்துவமிக்க இருக்கைகள், படகு சவாரி, சூரிய விளக்கு கம்பங்கள், கரையில் செயற்கை நீர்வீழ்ச்சி, கடைகள், குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 45 மாதங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பெருநகர சென்னைக்கான சிந்தனையில் உதிர்த்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.
ரூ.250 கோடி செலவில் 13 ஏரிகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் 9 ஏரிகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முடிந்த அளவிற்கு டிசம்பர் மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.