search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்கறி விலை கிடுகிடு உயர்வு: வாங்க ஆளில்லாமல் அழுகி வீணாகிறது
    X

    காய்கறி விலை 'கிடுகிடு' உயர்வு: வாங்க ஆளில்லாமல் அழுகி வீணாகிறது

    • முருங்கைக்காய் விலை ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது.
    • தக்காளி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.

    சென்னை

    'மாண்டஸ்' புயல் கரையை கடந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்தும் வருகிறது.

    தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் தாக்கம் காய்கறி விலையில் எதிரொலித்துள்ளது. இதனால் காய்கறி விலை ஓரிரு நாளிலேயே 'கிடுகிடு'வென உயர்ந்து இருக்கிறது.

    இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமான காய்கறி வரத்து மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறி விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு ரூ.20 வரை விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறி தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை ஆகிறது. பாகற்காய், கத்தரி, பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றின் விலை ரூ.10 அதிகரித்துள்ளது. தக்காளி விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. ரூ.12 முதல் ரூ.17 வரை விற்பனையான தக்காளி, தற்போது ரூ.30 வரை விற்பனை ஆகிறது. முருங்கைக்காய் விலையும் ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது.

    தற்போது மழை குறைந்திருப்பதால் விலை சற்று மீண்டு வருகிறது. நிலைமை சீரடையும் பட்சத்தில் காய்கறி விலை ஓரிரு நாளில் குறைந்து முன்புபோலவே விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை மழை காரணமாக மார்க்கெட்டுக்கு மக்கள் வருகை கணிசமாக குறைந்திருப்பதால், வாங்க ஆளில்லாமல் காய்கறி வீணாகி அழுகி போய் குப்பையில் கொட்டும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இது அனைவருக்குமே கவலையை தந்துள்ளது. வரும் நாட்களில் இந்த நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை நிலவரம் வருமாறு:- (மொத்தவிலையில்/கிலோவில்)

    பீன்ஸ்- ரூ.30, அவரை- ரூ.30 முதல் ரூ.35 வரை, பாகற்காய் (பன்னீர்) - ரூ.50, பாகற்காய் (பெரியது) - ரூ.50, கத்தரி-ரூ.30 முதல் ரூ.40 வரை, வெண்டை-ரூ.40, புடலங்காய்-ரூ.30 முதல் ரூ.40 வரை, சுரைக்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.40 முதல் ரூ.50 வரை, கேரட் (ஊட்டி) - ரூ.50, கேரட் (மாலூர்) -ரூ.35, முள்ளங்கி- ரூ.20 முதல் ரூ.25 வரை, முட்டைக்கோஸ்- ரூ.15 முதல் ரூ.20 வரை, இஞ்சி- ரூ.65, சாம்பார் வெங்காயம் - ரூ.50 முதல் ரூ.100 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்) - ரூ.20 முதல் ரூ.25 வரை, பல்லாரி வெங்காயம் (ஆந்திரா) - ரூ.15 முதல் ரூ.20 வரை, தக்காளி- ரூ.30, சேனைக்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.50 வரை, சேப்பங்கிழங்கு- ரூ.40 முதல் ரூ.50 வரை, காலிபிளவர் (ஒன்று) - ரூ.20, முருங்கைக்காய்- ரூ.120 முதல் ரூ.130 வரை, உருளைக்கிழங்கு- ரூ.30 முதல் ரூ.35 வரை, எலுமிச்சை- ரூ.40 முதல் ரூ.50.

    வெளிச்சந்தையில்...

    கோயம்பேடு மார்க்கெட் விலையை காட்டிலும் ஆள் கூலி, வாகன வாடகை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிச்சந்தையில் ரூ.10 முதல் ரூ.25 வரை கூடுதலாக காய்கறி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×