search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்களின் படகுகளை மீட்க இலங்கை அரசுடன் ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை- மத்திய மந்திரி தகவல்
    X

    சென்னையில் வெள்ளை இறால் இனப்பெருக்க மரபணு மேம்பாட்டு மையம் கட்டுவதற்கு மத்திய மந்திரிகள் பர்ஷோத்தம் ரூபாலா, எல்.முருகன் ஆகியோர் அடிக்கல் நாட்டியபோது எடுத்த படம்.

    மீனவர்களின் படகுகளை மீட்க இலங்கை அரசுடன் ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை- மத்திய மந்திரி தகவல்

    • மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் ரூ.18 கோடி செலவில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ். கருவிகள் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
    • தமிழ்நாட்டில் கடல்பாசி பூங்கா அமைப்பதற்கு ரூ.126 கோடி நிதி ஒதுக்கி கொடுத்து உள்ளோம்.

    சென்னை:

    இந்திய வெள்ளை இறால் ஏற்றுமதியை அதிகரிக்கவும், இனப்பெருக்கத்தை பெருக்கவும் அதன் மரபணு மேம்பாட்டு மையத்தை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள மத்திய மீன்வள ஆராய்ச்சி கவுன்சில்- உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவன வளாகத்தில் அமைப்பதற்கு பிரதம மந்திரியின் மத்ஸ்ய சம்பதா யோஜானா திட்டத்தின் கீழ் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இந்த மையத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா, இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். மீன் நோய்களுக்கான தேசிய கண்காணிப்பு திட்டம் (அலகு-2), இறால்களுக்கான காப்பீடு திட்டம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தனர்.

    இதில் மத்திய மீன்வளத்துறை செயலாளர் ஜந்திரா நாத் ஸ்வைன், மீன்வள ஆராய்ச்சியின் துணை இயக்குனர் ஜே.கே.ஜெனா, கடல்சார் மீன்வள இணை இயக்குனர் ஜெ.பாலாஜி, தமிழ்நாடு அரசின் மீன்வளம், மீனவர் நலத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், 'ஐ.சி.ஏ.ஆர்-சிபா' இயக்குனர் குல்தீப் கே.லால், தேசிய மீன்வள மரபணு அமைப்பு (லக்னோ) இயக்குனர் யு.கே.சர்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் இறால் வளர்ப்பு, மீன் வளம் ஆராய்ச்சி தொடர்பான கண்காட்சி நடைபெற்றது.

    பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் ரூ.18 கோடி செலவில் 5 ஆயிரம் ஜி.பி.எஸ். கருவிகள் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் படகு உரிமையாளர்கள் பயன் அடைவார்கள். இந்த கருவி மூலம் மீனவர்கள் எந்த இடத்தில் மீன்பிடித்து கொண்டு இருக்கிறார்கள், சர்வதேச எல்லையை கடக்கிறார்களா? என்பதை கண்காணிக்க முடியும்.

    தமிழ்நாட்டில் கடல்பாசி பூங்கா அமைப்பதற்கு ரூ.126 கோடி நிதி ஒதுக்கி கொடுத்து உள்ளோம். ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 2 மாவட்டங்களில் 2 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

    இதில் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்படும். மற்றொரு இடத்தில் விற்பனை நடைபெறும். தமிழக அரசு டெண்டர் விட்டு இதற்கான பணிகளை தொடங்கும்.

    தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும்போது மத்திய அரசு அவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வருகிறது. தமிழக மீனவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் 5 ஆயிரம் ஜி.பி.எஸ். கருவிகள் கொடுத்து உள்ளோம்.

    இலங்கை கடற்படை கைப்பற்றி உள்ள படகுகளை மீட்டு தர வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. இதுதொடர்பாக நானும், மத்திய மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவும் சேர்ந்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் நேரில் எடுத்துக்கூறி இருக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய மீன்வளத்துறை செயலாளர் தலைமையில் கூட்டு கமிட்டி ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஏப்ரல் மாதம் இரு நாடுகள் இணைந்து கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×