search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்: 300 பேர் கைது
    X

    நாகர்கோவிலில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வக்கீல்கள் போராட்டம்: 300 பேர் கைது

    • ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர்.
    • போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாட்டில் அமலுக்கு வந்துள்ள மாற்றி அமைக்கப்பட்ட 3 குற்றவியல் வழக்குகளை வாபஸ் பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் நாகர்கோ வில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் கோர்ட்டுகளில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காலை வக்கீல்கள் திரண்டனர்.

    சங்கத் தலைவர் அசோக் குமார் மற்றும் மூத்த வக்கீல் பால ஜனாதிபதி, வெற்றி வேல், மரியஸ்டீபன், குழித்துறை வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வக்கீல்கள் சங்க தலைவர் ரெஜினால்டு, இரணியல் வக்கீல்கள் சங்க தலைவர் பெஸ்லி பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்ராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் கோர்ட்டில் இருந்து வக்கீல்கள், ஊர்வலமாக வேப்பமூடு வழியாக அண்ணா பஸ் நிலையம் வந்தனர். அவர்க ளை போலீசார் ரோட்டின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி வக்கீல்கள் செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து மீண்டும் வக்கீல்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ரோட்டில் வைக்கப்பட்டி ருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு வக்கீல்கள் மீண்டும் அங்கிருந்து தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்பகுதியில் மீண்டும் போலீசார் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, தக்கலை பகுதிகளை சேர்ந்த வக்கீல்கள்களும் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டம் காரணமாக நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

    Next Story
    ×