search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விடிய விடிய சாரல் மழை
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் விடிய விடிய சாரல் மழை

    • வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.
    • விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரண மாக பிசான பருவ சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    தென் மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் வழக்கமாக வடகிழக்கு பருவ மழை காலகட்டத்தின்போது நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெறும்.

    கடந்த வாரம் பாபநாசம் அணையில் இருந்து பாச னத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து 7 கால்வாய்கள் மூலம் நிலப்பரப்புகளுக்கு தண்ணீர் செல்கிறது. தற்போது அணையில் 93.30 அடி தண்ணீர் இருக்கும் நிலையில் பாசனத்திற்காக அணையில் இருந்து 1004 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    இந்த தண்ணீர் மூலம் நெல்லை மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.

    தற்போது பாபநாசம், வி.கே.புரம், அம்பையில் தொடங்கி சேரன்மகாதேவி, வீரவ நல்லூர், கல்லிடைக்குறிச்சி, கோபால சமுத்திரம், மேலச்செவல், சீவலப்பேரி வரையிலும் விவசாயிகள் தங்களது வயல்களை நெல் சாகுபடிக்கு பண்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டிராக்டர்கள் மூலம் தொழி அடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடனா அணையில் 3 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 3.5 மில்லிமீட்டரும், குண்டாறில் 2 மில்லிமீட்டரும், அடவி நயினாரில் 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 2.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.சிவகிரி, வாசுதேவநல்லூர், உள்ளாார், ராயகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக பிசான பருவ நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டுள்ள னர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், நேற்று குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக இந்த 2 இடங்களிலும் நேற்று பிற்பகலில் தொடங்கி இன்று காலை வரையிலும் தொடர்ந்து சாரல்மழை பெய்த வண்ணம் உள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி மாநகர பகுதியிலும் சாரல் அடித்து வருகிறது. நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று காலை வரையிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    குலசேகரன்பட்டினத்தில் அதிகபட்சமாக 33 மில்லிமீட்டரும், திருச்செந்தூரில் 27 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. எட்டயபுரம், ஸ்ரீவைகுண்டம், கழுகுமலை, சாத்தான்குளம் பகுதிகளிலும் விட்டுவிட்டு சாரல் மழை அடித்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×