என் மலர்
உள்ளூர் செய்திகள்
மடிப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி திட்டம்
- ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஏரியின் பரப்பளவும் குறைந்தது.
- ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.
சென்னை:
தென்சென்னை பகுதியில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான மடிப்பாக்கம் ஏரி 62 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த 2017-ம் ஆண்டு ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்தது.
மேலும் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டதால் ஏரியின் பரப்பளவும் குறைந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளின் முயற்சியால் இந்த ஏரி மீட்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து மடிப்பாக்கம் ஏரியின் புனரமைப்பு பணிகளை கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி தொடங்கியது. ரூ.2 கோடி மதிப்பில் நடைபாதைகள், பெண்கள் உடற்பயிற்சி கூடம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.42 லட்சத்தில் வேலியுடன் கூடிய பாதை அமைக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி மதிப்பில் 2 கி.மீ நீளத்துக்கு ஏரியை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஏரி மடிப்பாக்கம் அய்யப்பன் நகர், கார்த்தி கேயபுரம், ராம் நகர், சதாசிவம் நகர், ராஜாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இதையடுத்து பொதுமக்கள் ஏரியின் கரையோரங்களில் 1,000 மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிலையில் தற்போது பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை வீசி எறிவதாலும், களை செடிகள் அதிக அளவில் வளர்ந்திருப்பதாலும் மடிப்பாக்கம் ஏரி மீண்டும் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மடிப்பாக்கம் பகுதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க மடிப்பாக்கம் ஏரி மட்டுமே முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியை பாதுகாக்க சென்னை மாநகராட்சி பல வசதிகளை செய்து கொடுத்தாலும், ஏரியை பராமரிக்க பாதுகாவலர்களும், தோட்டக்காரர்களும் இல்லை. எனவே சென்னை மாநகராட்சி மடிப்பாக்கம் ஏரியை பாதுகாத்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து வெள்ள தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மடிப்பாக்கம் ஏரியை மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் ஏரியை சீரமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.