search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களிடம்தான் -  கவிஞர் வைரமுத்து பேச்சு
    X

    நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசிய காட்சி. 

    மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களிடம்தான் - கவிஞர் வைரமுத்து பேச்சு

    • நன்றி இல்லாத மனிதன் காற்று, தண்ணீர் இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான்.
    • அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன்.

    பல்லடம் :

    பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளையின் 53 -வதுவான்மழை மாதாந்திர கருத்தரங்கம் வனம் அறக்கட்டளை அலுவலகமான வனாலயத்தில் நடைபெற்றது. சக்தி மசாலா உரிமையாளர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வனம் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், சிறு துளி அமைப்பு வனிதா மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனம் அறக்கட்டளை செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசியதாவது:- இந்த பூமியில் மனிதன் உயிர் வாழத் தேவையான முக்கியமான இரண்டு காற்று, தண்ணீர். நன்றி இல்லாத மனிதன் அந்த இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான். அவர்களை காப்பது மரங்கள். இதை அறியாமல் உலகில் மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களிடம்தான். ஆம் இதுவரை அவன் அளித்தது எண்ணிலடங்கா மரங்கள். ஏன் அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன். வனம், சிறுதுளி போன்ற ஆர்வலர்களால் அவன் செய்த தவறுகள் சிறிதேனும் சரி செய்யப்படுகிறது.

    நமது முப்பாட்டன் வள்ளுவன் முதல் குறளில் சொல்வது கடவுள் நம்பிக்கை. அதற்கு அடுத்ததாக தண்ணீரைப் பற்றிச் சொல்லி உள்ளார். ஏன்? தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியம். அந்தத் தண்ணீரின் தேவை இல்லை என்றால் நீ கடவுளைக் கூட வழிபட முடியாது .இந்த உலகம் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டது. மீதி உள்ள பகுதியில்தான் மனிதன் குடித்தனம் நடத்தி வருகிறான். அவனுடன் புழு, பூச்சி, விலங்குகள், போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இனியாவது மாற்றத்தைப் பற்றி யோசி, மரத்தை நேசி.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு மாலை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நாகராஜ்,சூழல் செயற்பாட்டாளர் சந்திரசேகர் வெள்ளிங்கிரி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கள் இயக்கத் தலைவர் நல்லசாமி மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×