search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் 100 கடைகள் வருகிறது- ஏலம் எடுக்க 1000 பேருக்கு மேல் போட்டி
    X

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் 100 கடைகள் வருகிறது- ஏலம் எடுக்க 1000 பேருக்கு மேல் போட்டி

    • பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.
    • அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இது திறக்கப்படுகிறது.

    இந்த பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.

    முதல் தளத்தில் டிரைவர்கள் கண்டக்டர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் அமர்வதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் வடிவமைப்பு குளறுபடி காரணமாக அதை சரி செய்யும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக இந்த துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவ்வப்போது உயர் அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    மழை பெய்தால் இப்போது அங்கு தண்ணீர் தேங்குகிறது. அதை சரிசெய்ய வழிவகை காணுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. அதை சரி செய்யும்படி கூறி உள்ளார். அதனடிப்படையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த புதிய பஸ் நிலையத்தில் 100 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுக்க 1000 பேர்களுக்கு மேல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள் வாரியத் தலைவர்கள் கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் என தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பல பேர் கட்சியினருக்கு கடைகளை வாங்கி கொடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் போட்டி பலமாக உள்ளது.

    ஆனால் எந்த கடைகளும் இன்னும் ஏலம் விடப்படவில்லை. சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதா? அல்லது பொது ஏலத்தில் விடுவதா? என்று முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ஒவ்வொரு கடைக்கும் சிபாரிசு பலமாக உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டதற்கு புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு பெறுவதற்கு கடும் போட்டி நிலவுவது உண்மைதான். இதை சமாளிப்பது பெரிய கஷ்டம். எனவே சி.எம்.டி.ஏ. வழி காட்டி விதிமுறைப்படி விரைவில் இதுபற்றி முடிவெடுப்போம் என்றார்.

    Next Story
    ×