என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை, தென்காசியில் வெளுத்து வாங்கிய கனமழை
- களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் காலையில் இருந்து மாலை வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால் தலையணையின் கீழ் பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு வரையிலும் நீடித்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 51 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மூலக்கரைப்பட்டியில் 25 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 9.6 மில்லிமீட்டர், அம்பையில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. அந்த அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 92.55 அடியாக இருந்த நிலையில் இன்று சுமார் 1 அடி அதிகரித்து 93.40 அடியை எட்டியுள்ளது. பிற்பகல் 94 அடிரைய எட்டியது.
அந்த அணைக்கு நேற்று காலை வரை வினாடிக்கு 288 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் தொடர்மழையால் இன்று காலை நிலவரப்படி 1,185 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 104.49 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து காரணமாக ஒரே நாளில் 2 1/4 அடி உயர்ந்து 106.82 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 63.70 அடியாக உள்ளது. அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் மக்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 46 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 42 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனிடையே இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள நடத்தகூடாது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 38 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆயக்குடி, சிவகிரி பகுதிகளிலும் கனமழை பெய்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. ராமநதியில் 24 மில்லிமீட்டரும், கடனா அணையில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கடனா அணை நீர்மட்டம் இன்று 1 1/2 அடி உயர்ந்து 42 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 55.50 அடியாகவும் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இன்று காலை வரை அங்கு 32.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் நேற்று 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைக்கு வரும் 40 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் கனமழை எச்சரிக்கையால் தென்காசி மாவட்டத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினத்தில் தலா 4 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 8.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்