என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் எரித்து கொலை- 3 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
- உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு வாலிபர் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
ஓச்சேரி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த திருமால்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் கடந்த 16-ந்தேதி இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது.
இதில் நெல்வாய் பகுதியை சேர்ந்த சூர்யா என்கிற தமிழரசன் (வயது23), விஜயகணபதி ஆகிய 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டனர். இதில் தமிழரசன் இறந்தார். இதையடுத்து தமிழரசனின் உடலை 23-ந்தேதி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் உடலை வாங்க குடும்பத்தினர் மறுத்தனர்.
தமிழரசனை எரித்து கொன்று கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு போராட்டக்காரர்கள் மற்றும் உறவினர்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சந்தித்து பேசினார். இதனையடுத்து உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டு வாலிபர் உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று பிரேத பரிசோதனை முடிந்து உடல் வர இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர்.






