search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னவெங்காயம் அறுவடைக்கு  புதிய எந்திரத்தை அறிமுகம் செய்து  வாடகைக்கு விட வேண்டும்
    X

    சின்னவெங்காயம் அறுவடைக்கு புதிய எந்திரத்தை அறிமுகம் செய்து வாடகைக்கு விட வேண்டும்

    • முளைப்பு திறன் குறைவு மற்றும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றங்கலால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது.
    • நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

    தாராபுரம் :

    திருப்பூா் மாவட்டத்தில் பல்லடம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், குண்டடம், பொங்கலூா், குடிமங்கலம், மூலனூா், வெள்ளக்கோவில், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

    இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

    இந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்வதற்கு புதிய தொழில்நுட்ப இயந்திரத்தை அறிமுகம் செய்து அரசு வாடகைக்கு விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

    இது குறித்து சின்னக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:- 60 நாள் பயிரான சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ஆள்கூலி, மருந்து, உரம், விதை, அறுவை கூலி என மொத்தம் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும்.

    ஒரு ஏக்கருக்கு 7 டன் முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும். முளைப்பு திறன் குறைவு மற்றும் பூச்சி தாக்குதல், இயற்கை சீற்றங்கலால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது.

    ஒரு கிலோ அசல் விலை ரூ.25 ஆகிறது. விவசாயிகளிடமிருந்து ரூ.45க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும். தற்போது சின்ன வெங்காயம் விளைச்சல் இல்லை. மழையால் சின்ன வெங்காய உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. போதிய இருப்பு வெங்காயமும் இல்லை.

    வெளி மாவட்ட, மாநில சின்ன வெங்காயம் வரத்தும் குறைவு. அதே சமயம் தேவை குறையவில்லை. அதனால் தற்போது ரூ.76 முதல் ரூ.80 வரை விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றனா். இதனால் நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு தற்போது ஆறுதல் அளிக்கும் வகையில் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.

    விதை சின்ன வெங்காயம் நடவு செய்ய மாா்கழி மாத பட்டம் சிறப்பானது. அதனால் இப்பட்டத்தில் நடவு செய்யவே விவசாயிகள் விரும்புவாா்கள். நடப்பாண்டில் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை நிலவுகிறது. அதனால் ஏற்றுமதியை எதிா்நோக்கியே அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

    பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் தண்ணீா் பிரச்சினை ஏதும் இல்லை. பல்லடம், பொங்கலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போதுதான் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அறுவடை சீசன் இல்லை.மாா்ச் மாதம் தான் இப்பகுதிகளில் அறுவடை தொடங்கும். தற்சமயம் தா்மபுரி, நாமக்கல், சேலம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்துதான் சின்ன வெங்காயம் கோவை, திருப்பூா் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    சின்ன வெங்காயம் சாகுபடியை பொறுத்தவரையில் அறுவடையின்போது அதிக ஆள்கள் தேவைப்படுவா். அவா்களுக்கு தினக்கூலி ரூ.600 முதல் ரூ.800 வரை ஆகிறது. மேலும், விவசாய வேலைக்கு ஆள்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது.

    ஐரோப்பா, அமெரிக்கா,ஜொ்மனி போன்ற நாடுகளில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு நவீன தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. இதனால், ஆள்கள் தேவை அதிகம் இருக்காது. இன்றைய நிலையில் ஆள்கள் கூலி மற்றும் ஆள்கள் பற்றாக்குறையால்தான் விவசாயிகள் பலா் வேளாண்மை சாகுபடியில் ஈடுபடுவதில்லை.

    புதிய தொழில்நுட்ப இயந்திரத்தை அரசு அறிமுகம் செய்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் கிராமப்புற விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு விட்டால் வேளாண்மை சாகுபடி அதிகரிக்கும் என்றாா்.

    Next Story
    ×